கள்ளக்குறிச்சியில், கடைகள் முன்பு நிறுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல்

கள்ளக்குறிச்சியில் கடைகள் முன்பு நிறுத்தப்பட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்தனர்.

Update: 2020-01-08 22:15 GMT
கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி நகரத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கடந்த மாதம், வியாபாரிகள், பஸ், கார், ஆட்டோ உரிமையாளர்கள், ஓட்டுனர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை காந்திரோட்டை ஒருவழி பாதையாக மாற்றும் வகையில் கவரைத்தெரு வழியாக வாகனங்கள் விடப்பட்டு போலீசார் ஒத்திகை பார்த்தனர்.மேலும் கச்சேரி சாலையில் கடையின் முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க, சாலையோரமாக வெள்ளை நிற கோடுகள் போடப்பட்டன.

வெள்ளை நிற கோட்டுக்கு வெளியே நிறுத்தப்படும் வாகனங்கள் மற்றும் கடையின் முன்பு வெள்ளை நிற கோட்டுக்கு உள்ளே ஒரு மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து, அவற்றை மினி டெம்போவில் ஏற்றி போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். அந்தவகையில் இதுவரை சுமார் 50 வாகனங்கள் போலீஸ் நிலையத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்து உள்ளது. போலீசாரின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்