உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை கேமரா பதிவுகளை சமர்ப்பிக்க அவகாசம் கேட்ட மனு தள்ளுபடி - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை கேமரா பதிவுகளை சமர்ப்பிக்க 15 நாள் அவகாசம் கேட்ட மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2020-01-08 21:45 GMT
மதுரை, 

மதுரை ஐகோர்ட்டு கிளைக்கு உட்பட்ட 13 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சித்தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கடந்த 3-ந் தேதி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டு இருந்தது.

ஆனால், கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்படவில்லை. மேலும், இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நேற்று முன்தினம் மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதன் பின்பு இதுகுறித்த விசாரணை நடந்து வந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வக்கீல் மற்றும் தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆகியோர், “5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேமரா பதிவுகளை பதிவிறக்கம் செய்ய கால அவகாசம் தேவைப்படுகிறது” என தெரிவித்தனர். ஆனால், இதனை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

அதனை தொடர்ந்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளை சமர்ப்பிக்க 15 நாட்கள் கூடுதல் அவகாசம் கேட்டு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து நீதிபதிகள், “கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஐகோர்ட்டில் சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை” என்று தெரிவித்ததுடன், கால அவகாசம் கேட்டு் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்