விக்கிரமசிங்கபுரம் அருகே, குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் - நோய் பரவும் அபாயம்
விக்கிரமசிங்கபுரம் அருகே குளத்தில் மீன்கள் செத்து மிதந்து அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விக்கிரமசிங்கபுரம்,
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரம் மெயின் ரோட்டில் அலங்காரியம்மன்குளம் உள்ளது. இக்குளத்தில் திடீரென மீன்கள் செத்து மிதக்கின்றன. மேலும் செத்த மீன்கள் அழுகிய நிலையில் உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த குளத்தில் குழி தாமரை இலைகள் படர்ந்து கிடந்து தண்ணீரே தெரியாதே அளவுக்கு காணப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக இந்த குழி தாமரை அழுகி தண்ணீரில் மூழ்க தொடங்கியது.
எனவே இந்த குழி தாமரை செடிகளை அழிக்க யாரேனும் குளத்தில் மருந்து தெளித்தார்களா? அதனால் மீன்கள் செத்து போனதா? என தெரியவில்லை.
மேலும் சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக வந்து பார்வையிட்டு, குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.