வேலைநிறுத்த போராட்டம்: கேரளா சென்ற தமிழக லாரிகள் செங்கோட்டை அருகே நிறுத்தம்

வேலைநிறுத்த போராட்டம் காரணமாக கேரளா சென்ற தமிழக லாரிகள் செங்கோட்டை அருகே நிறுத்தப்பட்டன. அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக பம்பைக்கு 4 பஸ்கள் இயக்கப்பட்டன.

Update: 2020-01-08 22:30 GMT
செங்கோட்டை, 

மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்கள் விரோத போக்கை கண்டித்தும் நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. அண்டை மாநிலமான கேரளாவில் தொழிலாளர்கள் முழு வேலைநிறுத்தம் செய்தனர்.

இதனால் கேரளாவில் இருந்து செங்கோட்டைக்கு வந்து செல்லும் 30-க்கும் மேற்பட்ட கேரள அரசு பஸ்கள் தமிழகத்துக்கு வரவில்லை. இருந்த போதிலும் அய்யப்ப பக்தர்கள், சபரிமலை கோவிலுக்கு சென்று வருவதற்கு வசதியாக தென்காசியில் இருந்து செங்கோட்டை வழியாக 4 பஸ்கள் பம்பைக்கு மட்டும் இயக்கப்பட்டன. இதனால் அய்யப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

செங்கோட்டையில் ஒருசில பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால், அவற்றில் பயணிகள் கூட்டம் இல்லை. மேலும், கேரளாவுக்கு பொருட்கள் ஏற்றிச்சென்ற லாரிகள் அனைத்தும் செங்கோட்டை அருகே இருக்கும் பிரானூர் பார்டர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதனால் தமிழக- கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் செய்திகள்