முழு அடைப்பு எதிரொலி: கர்நாடகத்தில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்; மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை

முழு அடைப்பையொட்டி கர்நாடகத்தில் தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். ஆனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

Update: 2020-01-09 00:15 GMT
பெங்களூரு, 

மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்கள் 8-ந் தேதி (அதாவது நேற்று) நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தன. அதன்படி கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. ஆனால் அரசு பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்கள் வழக்கம்ேபால் ஓடின. அரசு பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தைவிட குறைவாக இருந்தது.

பீனியா தொழிற்பேட்டையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஜாலஹள்ளி கிராஸ் வரை பேரணி நடத்தினர். அந்த தொழிற்பேட்டையில் அதிக எண்ணிக்கையில் சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. அரசு மற்றும் தனியார் பள்ளி-கல்லூரிகள் திறக்கப்பட்டிருந்தன. அரசு ஊழியர்கள் தங்களின் பணியில் வழக்கம்போல் ஈடுபட்டனர். திரையரங்குகள், வணிக வளாகங்கள், கடைகள், ஓட்டல்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் செயல்பட்டன. அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் மருத்துவமனைகளின் சேவைகளில் எந்த தொந்தரவும் ஏற்படவில்லை.

வங்கிகள் திறக்கப்பட்டிருந்தன. ஆனால் ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன. மென்பொருள் நிறுவனங்கள் உள்பட தனியார் நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்பட்டன. மொத்தத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பெங்களூருவில் சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

முக்கியமான இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பெங்களூரு சுதந்திர பூங்காவில் தொழிற்சங்கத்தினர் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர். மத்திய அரசு தொழிலாளர் விரோத போக்கை கடைப்பிடிப்பதாக கூறி கோஷங்களை எழுப்பினர். இதில் பங்கேற்ற பெரும்பாலானவர்கள் சிவப்பு சட்டை அணிந்திருந்தனர்.

அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க சுதந்திர பூங்காவில் போலீசார் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டனர். அங்கு இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. தொழிற்சங்கத்தினர் அதிகமாக வந்ததால், சேஷாத்திரி ரோட்டில் சிறிதளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பெங்களூரு மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதி களிலும் கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். மைசூருவில் தொழிலாளர்கள் பேரணி நடத்தினர். இதில் மேளதாளங்களுடன் பங்கேற்றவர்கள், மத்திய அரசுக்கு எதிராக பாட்டுப்பாடி நூதன முறையில முழக்கங்களை எழுப்பினர்.

இந்த போராட்டம் குறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘‘மத்திய அரசு தொழிலாளர் நலனுக்கு எதிராக செயல்படுகிறது. தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. இதை கண்டித்து தான் நாங்கள் இந்த போராட்டத்தை நடத்துகிறோம். மத்திய அரசு எங்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்றால், தொடர் போராட்டம் நடத்துவது குறித்து எங்கள் நிர்வாகிகள் முடிவு செய்வார்கள்’’ என்றனர்.

மேலும் செய்திகள்