தேர்தல் விரோதத்தில் மதுவில் விஷம் கலந்து கொடுக்கப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர் சாவு - கொலை வழக்கில் துப்புரவு பணியாளர் கைது

பரமத்திவேலூர் அருகே தேர்தல் விரோதத்தில் மதுவில் விஷம் கலந்து கொடுக்கப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை வழக்கில் துப்புரவு பணியாளர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2020-01-08 23:15 GMT
பரமத்திவேலூர், 

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இருக்கூர் ஊராட்சியில் கடந்த மாதம் 27-ந் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் 2-வது வார்டில் சுப்பையாம்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் மனைவி ராஜாமணி, 6-வது வார்டில் இருக்கூரை சேர்ந்த செந்தில்குமார் (வயது 40) மனைவி சத்யா ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் ஆறுமுகம் (52) ஏற்கனவே இருக்கூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவராக இருந்துள்ளார். இதனால் ஆறுமுகம் தனது மனைவியை துணைத்தலைவராக தேர்ந்தெடுக்க செந்தில்குமாரிடம் ஆதரவு தருமாறு கேட்டுள்ளார். ஆனால் இதற்கு செந்தில்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 30-ந் தேதி ஆறுமுகம் இருக்கூர் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றும் சரவணனுடன் (44) சேர்ந்து செந்தில்குமார் மற்றும் அவரது நண்பர் தியாகராஜனை மதுகுடிக்க அழைத்துள்ளார். பின்னர் அவர்கள் 4 பேரும் ஒன்றாக சேர்ந்து இருக்கூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே மதுகுடித்தனர்.

இதைத்தொடர்ந்து ஆறுமுகம், சரவணன் சேர்ந்து செந்தில்குமார் மற்றும் தியாகராஜனுக்கு மதுவில் வி‌‌ஷம் கலந்து கொடுத்துள்ளனர். இதில் உடல் நிலை பாதிக்கப்பட்ட அவர்களுக்கு கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பரமத்தி போலீசார் ெகாலை முயற்சி பிரிவின் கீழ் துப்புரவு பணியாளர் சரவணன், ஆறுமுகம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் செந்தில்குமார் சேர்க்கப்பட்டார். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து செந்தில்குமார் இறந்ததால் கொலை வழக்காக மாற்றி சரவணனை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான ஆறுமுகத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆறுமுகம் தி.மு.க.வை சேர்ந்தவர் என்பதும், செந்தில்குமார், தியாகராஜன் ஆகியோர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பரமத்திவேலூர் அருகே தேர்தல் விரோதத்தில் மதுவில் விஷம் கலந்து கொடுக்கப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்