புதுச்சேரிக்கு வந்த போது டிரைவரை கத்தியால் வெட்டிவிட்டு கடத்தப்பட்ட லாரி மீட்பு - தப்பி ஓடியவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

புதுச்சேரிக்கு வந்த போது டிரைவரை கத்தியால் வெட்டிவிட்டு கடத்தப்பட்ட லாரி மீட்கப்பட்டது. மேலும் தப்பி ஓடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-01-08 00:07 GMT
விக்கிரவாண்டி,

மும்பையை சேர்ந்தவர் சஞ்சீவ்குமார் சிங் (வயது 45). இவர் ஒரு லாரியில் மும்பையில் இருந்து ஹைட்ராலிக் எந்திரத்தை ஏற்றிக்கொண்டு புதுச்சேரிக்கு புறப்பட்டார். நேற்று முன்தினம் நள்ளிரவு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் கூட்டுசாலை வந்தபோது, லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு சஞ்சீவ்குமார் சிங் தூங்கிக்கொண்டிருந்தார். அதிகாலை 3 மணியளவில் அங்கு வந்த அடையாளம் தெரியாத 2 பேர், கண் இமைக்கும் நேரத்தில் சஞ்சீவ்குமார் சிங்கை லாரியில் இருந்து கீழே தள்ளி விட்டு அவரது தலையில் கத்தியால் வெட்டினர்.

பின்னர் அவர்கள் இருவரும் அந்த லாரியை கடத்திக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதில் ரத்தம் சொட்ட, சொட்ட வலியால் அலறி துடித்த சஞ்சீவ்குமார் சிங், கூச்சல் போட்டார். இந்த சத்தம் கேட்டதும் அக்கம், பக்கத்தில் உள்ள பொதுமக்கள் விரைந்து வந்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் காயமடைந்த சஞ்சீவ்குமார் சிங்கை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே இந்த சம்பவம் குறித்து விக்கிரவாண்டி போலீசார், உடனடியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்ததன்பேரில் மாவட்ட எல்லைகளில் போலீசார் உ‌ஷார்படுத்தப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ராதாபுரம் பகுதியை கடந்து அந்த லாரி வேகமாக சென்றது. இதை பார்த்ததும் அங்கு ரோந்துப்பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் அந்த லாரியை பின்தொடர்ந்து போலீஸ் ஜீப்பில் வேகமாக சென்றனர். போலீசார் பின்தொடர்ந்து வருவதை பார்த்த அவர்கள் இருவரும், புதுச்சேரி மாநிலம் திருக்கனூரை அடுத்த மண்ணாடிப்பட்டு பகுதியில் லாரியை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு அதிலிருந்து கீழே இறங்கி இருவரும் தப்பிச்சென்று விட்டனர்.

இதனையடுத்து கடத்தப்பட்ட அந்த லாரியை போலீசார் மீட்டு விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்