ஆன்லைனில், தரமற்ற பொருட்களை விற்று மோசடி செய்த 7 பேர் கைது
ஆம்பூர் அருகே ஆன்லைனில் தரமற்ற பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆம்பூர்,
ஆம்பூர் அருகே வடபுதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோ (வயது 42). இவர் அதே பகுதியில் ஹாலோ பிளாக் கற்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக இவரது செல்போனிற்கு அவ்வப்போது சிலர் அழைத்து ஒன்றுக்கும் பயன்படாத விளக்கை ரூ.1500-க்கு ஆன்லைனில் விற்கிறாயே என கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
தனக்கு சம்பந்தமில்லாமல் சிலர் தொடர்ந்து திட்டுவதால் அதிர்ச்சிக்குள்ளான இளங்கோ இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மாதனூரில் இயங்கி வந்த ஒரு மோசடி கும்பல் ரூ.1500-க்கு டேபிள் லைட்டை தருவதாக கூறி ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளனர். பணம் செலுத்திய பிறகு தரமற்ற விலை மலிவான பொருட்களை வழங்கியுள்ளனர். இதனை பெற்ற வாடிக்கையாளர்கள் மோசடி கும்பல் கொடுத்த செல்போன் எண்ணுக்கு போன் செய்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இதற்காக மோசடி கும்பல் இளங்கோவின் செல்போன் எண்ணை கொடுத்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மாதனூரில் இருந்த அந்த கும்பலை சேர்ந்த பிரசாந்த் (24), மணிகண்டன் (23), பசுபதி (25), விஜய் (21), நவீன் (21), பிரபு (23), விஜய் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து விலைமலிவான பொருட்களை பறிமுதல் செய்தனர்.