இன்று முழு அடைப்பு எதிரொலி: பெங்களூருவில் கடைகளை அடைக்க கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை; போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
இன்று(புதன்கிழமை) முழு அடைப்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் பெங்களூருவில் கடைகளை அடைக்க கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு,
தொழிலாளர் சட்டங்களை சிதைத்து வருவதுடன், தொழிற்சங்கங்களின் ஆலோசனையை மத்திய அரசு அவமதிப்பதாக குற்றம்சாட்டி இன்று(புதன்கிழமை) நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
இந்த முழு அடைப்பு போராட்டத்தின்போது கர்நாடகத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். அதுபோல் பெங்களூருவில் முழுஅடைப்பையொட்டி மேற்கொள்ளப்பட்டு உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாளை(அதாவது இன்று) பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடத்த சில அமைப்புகள் முடிவு செய்துள்ளனர். முழு அடைப்பையொட்டி பெங்களூரு நகரில் ஊர்வலம் நடத்த சில அமைப்பை சேர்ந்தவர்கள் அனுமதி கேட்டனர்.
அதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. பெங்களூருவில் ஊர்வலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அனுமதியின்றி ஊர்வலம் செல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் தடையை மீறி ஊர்வலம் சென்று பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் அதில் சம்பந்தப்பட்டவர்களும், ஊர்வலத்தை ஏற்பாடு செய்தவர்களும் தான் பொறுப்பு.
பெங்களூரு நகரில் யாரேனும் கடைகள், வணிக வளாகங்களை வலுக்கட்டாயமாக மூடி முழு அடைப்பில் ஈடுபட கட்டாயப்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முழுஅடைப்பையொட்டி சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இதனால் அங்கு ஒரு துணை போலீஸ் கமிஷனர், 3 உதவி போலீஸ் கமிஷனர்கள், 10 இன்ஸ்பெக்டர்கள், 40 சப்-இன்ஸ்பெக்டர்கள், 80 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் உள்பட 5 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும் டவுன்ஹால், மைசூரு வங்கி சர்க்கிளிலும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட உள்ளனர். இதுதவிர பஸ் நிலையம், மெட்ரோ நிலையம், ரெயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.