2-வது கட்ட வெள்ள நிவாரண நிதியாக கர்நாடகத்துக்கு ரூ.1,869 கோடி ஒதுக்கீடு; மத்திய அரசு அறிவிப்பு

2-வது கட்ட வெள்ள நிவாரண நிதியாக கர்நாடகத்திற்கு ரூ.1,869 கோடி நிதியை ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Update: 2020-01-07 23:00 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழையின்போது, கடந்த ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் கனமழை பெய்தது. இதனால் பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா, யாதகிரி, தார்வார், கதக் உள்ளிட்ட வட கர்நாடக பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

கடலோர கர்நாடகத்திலும் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வெள்ளத்தால் சுமார் 100 பேர் மரணம் அடைந்தனர். ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து வீதிகளுக்கு தள்ளப்பட்டனர். நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து ெகாடுக்கப்பட்டன.

வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த கர்நாடக அரசு அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு தாக்கல் செய்தது. அதில் வெள்ளத்தால் கர்நாடகத்தில் ரூ.33 ஆயிரம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், நிவாரண பணிகளை மேற்கொள்ள நிதியை ஒதுக்குமாறும் கேட்டுக் கொண்டது. கர்நாடக அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று 3 மாதங்களுக்கு பிறகு மத்திய அரசு முதல் கட்டமாக கர்நாடகத்திற்கு ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கியது. 2-வது கட்டமாக கர்நாடகத்திற்கு நிதி ஒதுக்குமாறு கர்நாடக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வந்தது.

இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி பிரதமர் மோடி கர்நாடகத்திற்கு வந்தார். துமகூருவில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார். இதில் பேசிய முதல்-மந்திரி எடியூரப்பா, கர்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள நிதி வழங்குமாறு கேட்டும், மத்திய அரசு இதுவரை 2-வது கட்ட நிதியை ஒதுக்கவில்லை என்று பேசி மத்திய அரசு மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். எடியூரப்பா வெளிப்படுத்திய இந்த அதிருப்தி பா.ஜனதாவில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கும் வகையில் உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் பேரிடர் நிதி குறித்து உயர்மட்ட குழுவின் கூட்டம் டெல்லியில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு அதாவது கர்நாடகம், மராட்டியம், அசாம், மத்திய பிரதேசம், இமாசலபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவது என்று தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி வெள்ள நிவாரண பணிகளுக்கு கர்நாடகத்திற்கு 2-வது கட்டமாக ரூ.1,869.85 கோடி நிதி ஒதுக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக ஒதுக்கப்பட்ட ரூ.1,200 கோடியுடன் சேர்த்து மொத்தம் இதுவரை மத்திய அரசு கர்நாடகத்துக்கு ரூ.3,069 கோடி நிதி ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்