மண்டபம் ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி ஏற்பு
மண்டபம் யூனியனில் 21 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
பனைக்குளம்,
மண்டபம் யூனியனில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதனையொட்டி வெற்றி பெற்றவர்கள் காலை 8.30 மணி முதலே தங்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் யூனியன் அலுவலகத்திற்கு வரத்தொடங்கினர்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் ராமேசுவரம் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் முத்துபிரேம்சந்த் மற்றும் போலீசார் மக்கள் கூட்டத்தையும், வாகனங்களையும் ஒழுங்குபடுத்தினர். அனைத்து கவுன்சிலர்களும் வந்த பின்னர் அவர்கள் கூட்ட அரங்கிற்கு அழைத்து செல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து பதவியேற்பு விழா தொடங்கியது. விழாவுக்கு யூனியன் ஆணையாளர் சேவுகபெருமாள் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர், மேலாளர்கள், அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.
முதலாவதாக மூத்த உறுப்பினர் முத்துச்செல்வத்துக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் நாகராஜ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து வார்டு வாரியாக மற்ற கவுன்சிலர்களுக்கு மூத்த உறுப்பினர் முத்துச்செல்வம் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன்படி ஒன்றிய கவுன்சிலர்கள் பகவதி லட்சுமி, சுப்புலட்சுமி, மருதுபாண்டியன், முருகன், ஆறுமுகம், நித்யா, பாதம்பிரியாள், சபியாராணி, கண்ணன், காளீசுவரி, பேச்சியம்மாள், சுகந்தி, அஜ்மல் சரிபு, மாரியம்மாள், தவுபீக் அலி, அலெக்ஸ், லட்சுமி, டிரோஸ், உஷாலட்சுமி, பேரின்பம் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.
விழாவில் ஆணையாளர் சேவுகப்பெருமாள் பேசும்போது, உள்ளாட்சி அமைப்பில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஒன்றிய கவுன்சிலர்கள் அரசு அலுவலர்களுடன் இணைந்து மக்கள் பணிகளை தொய்வின்றி செய்திட வேண்டும்.
மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை பெற்றுத்தந்து கிராம வளர்ச்சிக்காக பாடுபடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன் பின்னர் கவுன்சிலர்கள் அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.