குமளங்குளம், ஊராட்சி மன்ற தலைவரை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டம் - பதவி ஏற்பு விழா ஒத்திவைப்பு
குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவரை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏற்பு விழா ஒத்திவைக்கப்பட்டது.
நெல்லிக்குப்பம்,
கடலூர் ஒன்றியத்துக்குட்பட்ட குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஜெயலட்சுமி ஆட்டோ சின்னத்திலும், விஜயலட்சுமி பூட்டு சாவி சின்னத்திலும் போட்டியிட்டனர். இதில் கடந்த 2-ந்தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலட்சுமி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.
பின்னர் மறுநாள் பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்ட விஜயலட்சுமி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு அவருக்கு சான்றிதழ் வழங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விஜயலட்சுமிக்கு வழங்கப்பட்ட வெற்றி சான்றிதழை ரத்து செய்ய வேண்டும், குளறுபடிக்கு காரணமான தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஊராட்சி மன்ற தலைவர் பதவியேற்பு விழாவை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை ஜெயலட்சுமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று காலை வாண்டராசன்குப்பத்தில் உள்ள கிராம சேவை மையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. காலை 10 மணியளவில் தேர்தல் உதவி அலுவலர் கதிர்வேல் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கிராம சேவை மையத்துக்கு வந்தனர். இதைதொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏற்பதற்காக விஜயலட்சுமி தனது ஆதரவாளர்களுடன் கிராம சேவை மைய கட்டிடத்துக்கு வந்து கொண்டிருந்தார்.
இதுபற்றி அறிந்த ஜெயலட்சுமி ஆதரவாளர்கள் மற்றும் சஞ்சீவிராயன்கோவில், ராணிப்பேட்டை, சூரியம்பேட்டை, மூலக்குப்பம், நரியங்குப்பம், வாண்டராசன்குப்பம், வன்னியர்புரம் அணைக்கட்டு, புதுப்பாளையம் ஆகிய பகுதியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அங்கு திரண்டு வந்து விஜயலட்சுமியை அலுவலகத்துக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராசன், நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும் போலீசார் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பதவியேற்பு விழா குறித்து மாவட்ட கலெக்டர் தான் முடிவு எடுக்க வேண்டும். இந்த சம்பவம் குறித்து கலெக்டருக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
இருப்பினும் இதையேற்காத கிராம மக்கள் மாலை 4 மணிவரை கிராம சேவை மைய கட்டிடத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏற்கவில்லை. இதனால் பதற்றமான சூழல் நிலவியதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பிரச்சினை தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியனிடம் கேட்டபோது, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை காரணமாக குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.