கொடைரோடு அருகே, கார்-அரசு பஸ் மோதல்; அய்யப்ப பக்தர்கள் 3 பேர் பலி

கொடைரோடு அருகே கார்-அரசு பஸ் மோதிய விபத்தில் அய்யப்ப பக்தர்கள் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2020-01-06 23:00 GMT
கொடைரோடு, 

சென்னையில் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய, தென்காசி மாவட்டம் செங்கோட்டை வழியாக பக்தர்கள் குழுவினர் ஒரு காரில் சென்றனர். பின்னர் அவர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு, பழனி முருகன் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டனர். இதையடுத்து அவர்கள் பழனி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர்.

சென்னை திருவேற்காடு சுதந்திர சோழபுரத்தை சேர்ந்த நரசிம்மன் (வயது 42) என்பவர் காரை ஓட்டினார். மதுரை-திண்டுக்கல் 4 வழிச்சாலையில், அம்மையநாயக்கனூர் நக்கம்பட்டி மேம்பாலம் அருகில் வந்து கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரை (சென்டர் மீடியா) தாண்டி மறுகரைக்கு சென்றது. அந்த நேரத்தில் கோவையில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பஸ், கார் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் பஸ் நிற்காமல், 25 அடி தூரத்துக்கு காரை இழுத்து சென்றது. கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில், கார் அப்பளம்போல் நொறுங்கியது. இதில் கார் டிரைவர் நரசிம்மன் காரின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் காரில் வந்த சென்னை வேளச்சேரியை சேர்ந்த அண்ணாசாமி (25), கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த புத்தேரியை சேர்ந்த சுந்தர் (32) மற்றும் நரசிம்மன் மகன் அஸ்வின் (12), மகள் சம்ருத்ராதேவி (8) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமார், அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயபாண்டியன், பாலமுத்தையா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அண்ணாசாமி, சுந்தர் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

அஸ்வின், சம்ருத்ராதேவி ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே விபத்துக்குள்ளான காரும், அரசு பஸ்சும் கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்