ரூ.7½ கோடியில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் - முதல்-அமைச்சர் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்

ரூ.7½ கோடியில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை முதல்- அமைச்சர் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

Update: 2020-01-06 23:00 GMT
அரியலூர், 

அரியலூரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரூ.7 கோடியே 35 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டது. இந்த அலுவலகம் தரைத்தளத்துடன் மூன்று தளங்கள் கொண்ட கட்டிடம் ஆகும். இந்த கட்டிடத்தில், போலீஸ் சூப்பிரண்டு அறை, கூட்டரங்கு, வரவேற்பாளர் அறை, பாதுகாவலர் அறை, குழந்தைகள் ஓய்வு அறை, மனமகிழ் மன்றம், உணவு விடுதி, அலுவலக கண்காணிப்பாளர் அறை, புகைப்பட பிரிவு அறை, தபால் பிரிவு, மாவட்ட குற்ற புலனாய்வு ஆவணப்பிரிவு, கண்காணிப்பாளர் அலுவலகங்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள், பார்வையாளர் அறை, தனிப்பிரிவு அறை, பயிற்சிக்கூடம் மற்றும் மாவட்ட குற்ற ஆவண காப்பகம் போன்ற பல்வேறு பிரிவுகளும் மற்றும் ஜெனரேட்டர் வசதி, மழை நீர் சேகரிப்பு தொட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தள அமைப்புகள், கழிவறைகள், "லிப்டு" போன்ற அனைத்து வசதிகளும் உள்ளன.

இந்நிலையில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் புதிய கட்டிடத்தினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் உடனிருந்தார். அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கட்டிடம் திறப்பு விழா நேரலையில், கலெக்டர் ரத்னா, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றியும், மரக்கன்றுகளையும் நட்டு வைத்தனர்.

விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி (பொறுப்பு) பாலாஜி, மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி, தமிழ்நாடு காவல் வீட்டு வசதி கழகம் செயற்பொறியாளர் நாச்சிமுத்து, உதவி செயற்பொறியாளர் திருமாறன், உதவி பொறியாளர் பாலசுப்பிரமணியன், தொழில்நுட்ப உதவியாளர் வீரமணி மற்றும் போலீசார் உள்பட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்