பஞ்சவடி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு - பக்தர்கள் பக்தி பரவசம்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பஞ்சவடி கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி,
புதுவையை அடுத்த தமிழக பகுதியான பஞ்சவடியில் பிரசித்தி பெற்ற பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இ்ங்கு 36 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பு.
இந்த கோவில் உருவாவதற்கு முன்பு பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் உறுப்பினர்கள் தேவ பிரசன்னம் பார்த்தனர். அப்போது இந்த கோவிலில் திருமலை வெங்கடாசலபதி எழுந்தருளுவார் என்பது தெரியவந்தது.
இதை மெய்ப்பிக்கும் விதமாக கடந்த 2009-ம் ஆண்டு திருமலை திருப்பதி உற்சவர் ஸ்ரீநிவாச பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் கடந்த 15.3.2009 அன்று எழுந்தருளினார். அன்று இரவு பஞ்சவடி ஆஞ்சநேயர் சன்னதியில் தங்கினார். மறுநாள் திருமலையில் நடப்பதுபோன்றே எல்லா பூஜைகளும் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்தநிலையில் பஞ்சவடி கோவிலில் கடந்த ஆண்டு தனி சன்னதி அமைக்கப்பட்டு ஸ்ரீவாரி வெங்கடாசலபதி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இது மத்திய திருப்பதி என்றழைக்கப்படுகிறது.
இங்கு கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி பரமபத வாசல் அமைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கி நடந்து வருகிறது. பகல் பத்து, இரவு பத்து என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா விமரிைசயாக கொண்டாடப்பட்டு வருகிறது,
இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் மோகினி அவதாரத்தில் ஸ்ரீநிவாச பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று அதிகாலையில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
அப்போது நடந்த சிறப்பு பூஜைக்குப்பின் பெருமாள் (வெங்கடாசலபதி) சொர்க்கவாசல் வழியாக ஸ்ரீதேவி, பூதேவி சகிதம் எழுந்தருளினார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று கோஷம் எழுப்பினார்கள். கோவிலை வலம் வந்த பெருமாள் வசந்த மண்டபத்தில் நாள் முழுவதும் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சேவா டிரஸ்ட்டின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், அறங்காவலர் யுவராஜன், செயலாளர்கள் நரசிம்மன், பழனியப்பன், பொருளாளர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.