கடநாடு ஊராட்சி தலைவருக்கான வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு - கலெக்டரிடம், கிராம மக்கள் புகார்

கடநாடு ஊராட்சி தலைவருக்கான வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்து உள்ளதாக கலெக்டரிடம் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.;

Update: 2020-01-06 21:45 GMT
ஊட்டி,

தமிழகத்தில் கடந்த மாதம் 2-ந் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதனால் ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. மேலும் அங்கு பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை போடுவதற்காக பெட்டி வைக்கப்பட்டது. தற்போது தேர்தல் முடிந்து விட்டது. இதனால் கடந்த ஒரு மாதத்துக்கு பிறகு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார்.

அப்போது ஊட்டி அருகே கடநாடு கிராம மக்கள், ஊரக உள்ளாட்சி தேர்தலில் கடநாடு ஊராட்சி தலைவருக்கான வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக புகார் கூறி வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைக்க கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கலெக்டரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கடந்த 2-ந் தேதி காலை 10 மணியளவில் கடநாடு ஊராட்சி தலைவருக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முகவர்கள் முன்னிலையில் தொடங்கப்பட்ட வாக்கு எண்ணிக்கையானது தேர்தல் அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் ஒரு மணி நேரத்தில் நடந்தது. ஆனால் மறுநாள் அதிகாலையில் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. நள்ளிரவு 2.30 மணியளவில் திடீரென மறுவாக்கு எண்ணிக்கை என்று அதிகாரிகள் கூறினர். முகவர்கள் யாரையும் அழைக்காமல் இரண்டு வேட்பாளர்கள் முன்னிலையில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.

வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் இருந்த எங்கள் தரப்பு சில மணி நேரங்கள் கழித்து பின்தங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டதன் நோக்கம் தெரியவில்லை. கடநாடு ஊராட்சி தலைவருக்கான வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்து உள்ளது. எனவே எங்களிடம் உள்ள வாக்காளர் அடையாள அட்டைகளை ஒருமனதாக முடிவுவெடுத்து ஒப்படைக்க வந்து உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கூடலூர் அருகே அய்யன்கொல்லி கிராமத்தை சேர்ந்த பனியர் இன மக்கள் கொடுத்த மனுவில், அய்யன்கொல்லி கிராமத்தில் பனியர் இன மக்கள் 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அதில் ஏழு பேருக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை. ஆகவே எங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

ஊட்டி விவசாயி ஒருவர் அளித்த மனுவில், விளைநிலத்தில் புருக்கோலி பயிர் செய்து உள்ளேன். புருக்கோலி அழுகும் நிலையில் செடிகளை ஒரு நோய் தாக்கி விட்டது. அது என்ன நோய் என்று தெரிந்துகொள்ளவும், அதனை தடுக்கவும் ஊட்டி தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிலையத்துக்கு சென்று நோய் பாதித்த புருக்கோலியை காண்பித்தேன். அதற்கு அலுவலர் ஒருவர் தோட்டத்திற்கு வந்து பார்த்து விட்டு, மருந்து கூறுகிறேன் என்றார். ஆனால் இதுவரை தோட்டத்தை பார்வையிட அலுவலர் வரவில்லை. இதனால் புருக்கோலி செடிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளதோடு, இழப்பீடு ஏற்பட்டு உள்ளது. எனவே உரிய ந‌‌ஷ்டஈடு பெற்றுத்தர வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்