நல்லம்பள்ளியில் திடீர் திருப்பம்: தி.மு.க. ஆதரவுடன், சுயேச்சை கவுன்சிலர் ஒன்றியக்குழு தலைவராகிறார்
நல்லம்பள்ளியில் திடீர் திருப்பமாக தி.மு.க. ஆதரவுடன் சுயேச்சை கவுன்சிலர் ஒன்றியக்குழு தலைவராகிறார்.
நல்லம்பள்ளி,
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த 6 பேரும், பா.ம.க.வை சேர்ந்த 7 பேரும், தே.மு.தி.க.வை சேர்ந்த ஒருவரும் வெற்றி பெற்றனர். இதேபோல் தி.மு.க.வை சேர்ந்த 5 பேரும், சுயேச்சைகள் 10 பேரும் வெற்றி பெற்றனர். தலைவர் பதவியை கைப்பற்ற குறைந்தது 15 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அ.தி.மு.க. கூட்டணி கட்சிக்கு 14 உறுப்பினர்கள் உள்ளனர்.
இவர்களுக்கு மேலும் ஒரு உறுப்பினரின் ஆதரவு இருந்தால் ஒன்றியக்குழு தலைவர் பதவியை கைப்பற்ற முடியும். இதனால் ஒரு சுயேச்சை உறுப்பினரை இழுக்க அ.தி.மு.க. கூட்டணி தீவிரமாக உள்ளது. நல்லம்பள்ளி ஒன்றியக்குழு தலைவர் பதவி பா.ம.க.வுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதேபோல் 5 உறுப்பினர்களை வைத்துள்ள தி.மு.க., 10 சுயேச்சை உறுப்பினர்களுடன் சேர்ந்துள்ளது. இதில் தலைவர் பதவியை சுயேச்சை உறுப்பினர் ஒருவருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று சுயேச்சை உறுப்பினர்கள் 10 பேர் மற்றும் தி.மு.க.வினர் 5 பேர் என 15 பேரும் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு ஒரே வேனில் அழைத்து வரப்பட்டனர்.
பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் மீண்டும் வேனில் அழைத்து சென்று ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் திடீர் திருப்பமாக தி.மு.க. ஆதரவுடன், சுயேச்சை கவுன்சிலர் நல்லம்பள்ளி ஒன்றியக்குழு தலைவராகிறார்.