குறை தீர்க்கும் கூட்டத்துக்கு மக்கள் வருகை குறைந்தது - கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடியது
குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க மக்கள் வருகை குறைந்ததால் கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
நெல்லை,
நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஷில்பா பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
ஆதித்தமிழர் கட்சி நெல்லை மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் அந்த கட்சியினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் ஒரு கல்லூரியில் அலுவலக பணிக்கு அருந்ததியர் இன பெண்களை தேர்வு செய்வதாக அறிவித்து இருந்தனர். ஆனால் குறிப்பிட்டபடி அந்த இன பெண்களை தேர்வு செய்யாமல் இடஒதுக்கீட்டை புறக்கணித்து உள்ளனர். இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக செயல்பட்டு அரசாணையை மாற்றுகின்றனர். எனவே அதிகாரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து இடஒதுக்கீட்டின்படி பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
அம்பை அருகே உள்ள அடைச்சாணி பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியை தென்காசி மாவட்டத்தில் இருந்து பிரித்து மீண்டும் நெல்லை மாவட்டத்திலேயே சேர்க்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். இதுதவிர மக்கள் தனித்தனியாக கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
கூட்டத்துக்கு மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளிகளை, அவர்களது இருக்கையிலேயே அமர வைத்து அவர்களிடம் நேரடியாக கலெக்டர் குறைகளை கேட்டு, மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் கலெக்டர் விருப்புரிமை நிதியின் கீழ் ரூ.3.87 லட்சம் மதிப்பிலான பிரெய்லி முறை பாடப்புத்தகம் அச்சிடும் எந்திரத்தை பாளையங்கோட்டையில் உள்ள பார்வைத்திறன் குறைபாடுடையோர் மேல்நிலைப்பள்ளிக்கு வழங்கினார். குன்னத்தூர் பகுதியை சேர்ந்த 15 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும் வழங்கினார்.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டேட் வங்கி கடன் வழங்கும் முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், நெல்லை உதவி கலெக்டர் மணிஷ் நாரணவரே, சமூக பாதுகாப்பு திட்ட தனி உதவி கலெக்டர் சசிரேகா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி புதிய மாவட்டம் உருவாக்கப்பட்ட பின்னர், நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வாரந்தோறும் திங்கட்கிழமை மனுக்கள் கொடுக்க வரும் பொதுமக்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்து விட்டது. நேற்று வைகுண்ட ஏகாதசி என்பதாலும், விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாலும் மனு கொடுக்க மக்கள் வருகை குறைவாக இருந்தது. இதனால் கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.