பட்டுக்கோட்டையில், வடமாநிலத்தவர் கடைகளுக்கு பூட்டு போட்ட 13 பேர் கைது
பட்டுக்கோட்டையில் வடமாநிலத்தவர் கடைகளுக்கு பூட்டு போட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
பட்டுக்கோட்டை,
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தெற்கு காளியம்மன் கோவில் தெருவில் வடமாநிலங்களை சேர்ந்த சிலர் இருசக்கர வாகன உதிரிபாகங்கள், மின் சாதன பொருட்கள், மொபைல் போன் விற்பனை கடைகளை நடத்தி வருகின்றனர்.சம்பவத்தன்று இரவு தமிழ்தேசிய கட்சியை சேர்ந்தவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்களின் 5 கடைகளுக்கு பூட்டு போட்டனர். பின்னர் கடைகளில் தமிழகத்தை விட்டு வெளியேறு என்பன போன்ற வாசகங்கள் இடம் பெற்ற துண்டு பிரசுரங்களை ஒட்டிச்சென்றனர். இதுபற்றி பட்டுக்கோட்டை நகர போலீசில் மங்கள்ராம் (வயது25), தினேஷ்குமார் (28), ஓம் பிரகாஷ் (24) ஆகிய 3 பேரும் புகார் அளித்தனர்.
அதன்பேரில் இதுதொடர்பாக பட்டுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாப்பாநாடு பகுதியை சேர்ந்த தஞ்சை மாவட்ட தமிழ்தேசிய கட்சி பொறுப்பாளர் கார்த்தி (32), அருண் (30), சிவராஜன் (29), ராஜா (28), ரகுவரன் (30), பிரகாஷ் (18), பாலமுருகன் (29), சோழன் குடிக்காடு கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் (24), வெள்ளூரை சேர்ந்த தமிழ்வாணன் (47), இளவரசன் (22), இனியவன் (19), குமார் (57), பூசைக்கண்ணு (42) ஆகிய 13 பேரை கைது செய்தனர்.