திருக்காட்டுப்பள்ளியில், பொங்கல் கரும்பு விற்பனை மந்தம் - வியாபாரிகளுக்காக காத்திருக்கும் விவசாயிகள்

திருக்காட்டுப்பள்ளியில் பொங்கல் கரும்பு விற்பனை மந்தமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகள் வியாபாரிகளுக்காக காத்திருக்கிறார்கள்.

Update: 2020-01-06 22:15 GMT
திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டத்தில் காவிரி கரையோரம் அமைந்துள்ள திருக்காட்டுப்பள்ளி, கோவிலடி, திருச்சனம்பூண்டி, பூண்டி, பவனமங்கலம், வி‌‌ஷ்ணம்பேட்டை, ஒன்பத்துவேலி, கூடணாணல், சிவந்திதிடல், கண்டமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் கரும்பு விவசாயம் நடைபெற்று வருகிறது.காவிரி கரையோரம் என்பதால் இங்கு விளைவிக்கப்படும் கரும்புகளுக்கு தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த பகுதியில் சித்திரை பட்டத்தில் பயிர் செய்யப்பட்ட பொங்கல் கரும்புகள் தொடர் மழையையும் தாக்குப்பிடித்து தற்போது நல்ல நிலைமையில் உள்ளன. பொங்கல் கரும்புகளை தோகை உரித்து வெட்டி வெளியேற்றி விற்பனை செய்வதற்கு விவசாயிகள் தயாராக உள்ளனர்.

வழக்கமாக திருக்காட்டுப்பள்ளி பகுதியில் விளையும் கரும்புகளை கொள்முதல் செய்ய வெளிமாவட்ட வியாபாரிகள் ஆங்கில புத்தாண்டு நாளில் இருந்தே வர தொடங்கி விடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு விற்பனை மந்தமாக உள்ளதாக கூறும் கரும்பு விவசாயிகள், வெளி மாவட்ட வியாபாரிகளுக்காக காத்திருக்கிறார்கள்.பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து லாரிகளில் எடுத்து செல்லும் மொத்த வியாபாரிகள் யாரும் வராததால் கரும்பு விவசாயிகள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர். அரசு பொங்கல் பரிசுக்கு கரும்புகளை கொள்முதல் செய்யுமா? என்ற எதிர்பார்ப்பும் விவசாயிகள் மத்தியில் உள்ளது.

தற்போது 10 கரும்புகள் கொண்ட கட்டு ஒன்று ரூ.170 வரை விலை போகிறது. பொங்கல் நெருங்கும் நேரத்தில் கரும்பு கட்டு விலை இன்னும் அதிகமாக வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

திருக்காட்டுப்பள்ளிக்கு அருகே கிராமங்களை சேர்ந்த வியாபாரிகள் பொங்கல் பண்டிகைக்கு 2 நாட்கள் முன்பாக வந்து வாங்குவார்கள் என்பதால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த கரும்புகளை நல்ல விலைக்கு விற்று விடலாம் என்று நம்பிக்கையுடன் காத்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்