சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் ஆண் குழந்தையை கடத்திய பெண் கைது
சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரியில் இருந்து, பச்சிளம் ஆண் குழந்தையை கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவர் ஆஸ்பத்திரியில் விட்டு சென்ற அடையாள அட்டையால் போலீசில் சிக்கியுள்ளார்.
சிக்கமகளூரு,
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் சுனில். இவரது மனைவி அஞ்சலி. இந்த தம்பதி சிக்கமகளூரு அருகே உள்ள பேகூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர். சுனில் அப்பகுதியில் உள்ள மரஅறுவை நிலையத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அஞ்சலிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அவரை சுனில் பிரசவத்திற்காக சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையையும், மனைவியையும் சுனில் அருகிலேயே இருந்து கவனித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆஸ்பத்திரிக்கு வந்த பெண் ஒருவர், சுனிலிடம் நைசாக பேச்சு கொடுத்தார். மேலும் சுனிலின் குழந்தையை அந்த பெண் கவனித்து கொண்டார்.
இந்நிலையில் தனது குழந்தையை பார்த்து கொள்ளும்படி அந்த பெண்ணிடம் கூறிவிட்டு சுனில் அருகே உள்ள கடைக்கு சென்று இருந்தார். சிறிது நேரம் கழித்து சுனில் திரும்பி வந்து பார்த்த போது குழந்தையையும், அந்த பெண்ணையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சுனில் ஆஸ்பத்திரி முழுவதும் குழந்தையையும், பெண்ணையும் தேடிப்பார்த்தார். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்து சுனில், சிக்கமகளூரு டவுன் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் அந்த பெண் ஒரு பையை விட்டு சென்று இருந்தார். அந்த பையில் ஒரு அடையாள அட்டை இருந்தது.
அதை போலீசார் பார்த்த போது அந்த பெண் சிக்கமகளூரு அருகே அம்பலே கிராமத்தை சேர்ந்த ஜெயம்மா(வயது 58) என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணிடம் விசாரிப்பதற்காக போலீசார் அம்பலே கிராமத்திற்கு சென்றனர். ஆனால் அவர் வீட்டில் இல்லை.
ஜெயம்மாவின் செல்போன் எண்ணை பக்கத்து வீட்டில் வாங்கிய போலீசார், அவரை செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் போனை எடுத்து பேசவில்லை. பின்னர் ஜெயம்மாவின் செல்போன் எண் சிக்கமகளூரு டவுன் கோட்டை பகுதியில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார் ஜெயம்மாவை பிடித்தனர். அப்போது அவரது கையில் குழந்தை இருந்தது. அந்த குழந்தையை மீட்ட போலீசார் அதை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தைக்கு பெற்றோர் அன்பு முத்தமிட்டனர். பிடிபட்ட ஜெயம்மாவை போலீசார் கைது செய்து குழந்தை கடத்தியது குறித்து விசாரித்தனர்.
ஆனால் அவர் சரியான முறையில் பதில் எதுவும் சொல்லவில்லை. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரீஷ் பாண்டே நிருபர்களிடம் கூறியதாவது:-
சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரியில் இருந்து அசாம் மாநிலத்தை சேர்ந்த தம்பதியின் குழந்தையை கடத்தி சென்றதாக ஜெயம்மா என்ற பெண்ணை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
குழந்தை காணாமல் போன போது போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சக்கராயப்பட்டணா பகுதியில் ஒரு குழந்தை சாலையில் கிடந்ததாகவும், அதை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வீட்டிற்கு எடுத்து சென்றதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சக்கராயப்பட்டணாவுக்கு சென்று அந்த நபரிடம் இருந்த குழந்தையை மீட்டு விசாரித்தனர். ஆனால் அந்த குழந்தை அசாம் மாநில தம்பதியின் குழந்தை இல்லை என்பது தெரியவந்தது. பின்னர் அந்த குழந்தையை போலீசார் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர். குழந்தை கடத்தப்பட்டதன் எதிரொலியாக சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரசவ வார்டு முன்பு இனிமேல் போலீஸ்காரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்து உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.