பாணாவரம் அருகே, ஏரியில் மூழ்கி 3 பேர் பலி
பாணாவரம் அருகே ஏரியில் குளித்த 3 பேர் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பனப்பாக்கம்,
பாணாவரத்தை அடுத்த மாலைமேடு கிராமத்தை சேர்ந்தவர் தேசன், கூலித்தொழிலாளி. இவருடைய மகள் அஸ்வினி (வயது 15) பாணாவரத்தில் உள்ள அரசுப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தாள். அதே பகுதியை சேர்ந்த உலகநாதன் மகள் ஜெயஸ்ரீ (10) அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். அதே பகுதியை சேர்ந்த சங்கர் மகன் தமிழரசன் (7) பாணாவரம் அரசு தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.
அஸ்வினி நேற்று மதியம் 1 மணியளவில் துணிகள் துவைக்க அப்பகுதியில் உள்ள வேடந்தாங்கல் ஏரிக்கு சென்றாள். அப்போது அவளுடன் ஜெயஸ்ரீயும், தமிழரசனும் சென்றுள்ளனர். ஏரிக்கரையோரம் அஸ்வினி துணிகளை துவைத்து கொடுக்க, அதனை ஜெயஸ்ரீ தண்ணீரில் அலசி கொண்டிருந்தாள். தமிழரசன் ஏரியில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தான்.
அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்ற அவன் நீச்சல் தெரியாத காரணத்தால் தண்ணீரில் மூழ்கினான். இதைக்கண்ட அஸ்வினியும், ஜெயஸ்ரீயும் உடனடியாக ஏரியில் இறங்கி அவனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் ஆழமான பகுதி மற்றும் நீச்சல் தெரியாததால் அவர்களால் தமிழரசனை காப்பாற்ற முடியவில்லை. இந்த முயற்சியில் தோல்வியடைந்த அவர்களும் தண்ணீரில் மூழ்கினர். ஏரிக்கு வந்த 3 பேரும் காணாமல் போனதை ஏரிக்கரையோரம் மாடுகள் மேய்த்து கொண்டிருந்தவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் அப்பகுதி மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் உடனடியாக ஏரியில் இறங்கி 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறிதுநேரத்துக்கு பின்னர் உயிரிழந்த நிலையில் 3 பேரும் மீட்கப்பட்டனர். இதைக்கண்டு அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாணாவரம் போலீசார் 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.