மோட்டார் சைக்கிள் மோதி, படுகாயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு
சிப்காட் வேன் ஸ்டாண்ட் அருகே மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிப்காட் (ராணிப்பேட்டை),
வாலாஜா, ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் முனியம்மாள் (வயது 60), இவர் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலை தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரும், சிப்காட், புது காம்ப்ளக்ஸ் பகுதியை சேர்ந்த சுகுணாவும் (41) கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். சிப்காட் வேன் ஸ்டாண்ட் அருகே எம்.பி.டி.சாலையில் அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் முனியம்மாள் சென்ற மொபட் மீது மோதியது. இதில் முனியம்மாள், சுகுணா படுகாயமடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
முனியம்மாளுக்கு காயம் சரியாக குணமாகாததால் மீண்டும் கடந்த டிசம்பர் மாதம் 27-ந் தேதி சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.