பவானி அருகே, நூல் மில்லில் பயங்கர தீ விபத்து - பொருட்கள் எரிந்து நாசம்

பவானி அருகே நூல் மில்லில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.

Update: 2020-01-05 22:30 GMT
பவானி, 

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சித்தோடு கொங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாராயணகிருஷ்ணன். இவர் சித்தோட்டில் நூல் மில் வைத்து நடத்தி வருகிறார். இங்கு சுமார் 40 பேர் வேலை செய்து வருகின்றனர்.

நேற்று மாலை 5 மணி அளவில் வழக்கம்போல் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த கழிவு பஞ்சு திடீரென தீப்பிடித்து எரிந்தது. மளமளவென பரவிய தீ மில் முழுவதும் பிடித்து எரிந்தது.

இதனால் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். பின்னர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை.

இதுகுறித்து பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் காந்தி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தொழிலாளர்களுடன் இணைந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. எனினும் தீ விபத்தில் அங்கிருந்த கழிவு பஞ்சுகள், நூல் உள்ளிட்டவை எரிந்து நாசம் ஆனது. மில் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.

இதன் சேத மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்