சின்னசேலம் ஏரிக்கரையில் சிமெண்டு படித்துறை அமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
சின்னசேலம் ஏரிக்கரையில் சிமெண்டால் ஆன படித்துறை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சின்னசேலம்,
சின்னசேலம் வடக்கு கிராம எல்லையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. சுமார் 232 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரிக்கு தகரை, திம்மாபுரம், பாண்டியங்குப்பம் வழியாக வரும் மயூரா ஆற்றின் மூலமும், கோமுகி அணையில் இருந்தும் தண்ணீர் வரும். இந்த ஏரியின் மூலம் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.
இந்த ஏரியை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், ஏரி தூர்ந்து போய் கிடக்கிறது. மேலும் ஏரியின் கரையும் பலப்படுத்தப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு, தண்ணீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது. ஏரியை தூர்வாரி குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சிமெண்டு படித்துறை
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சின்னசேலம் ஏரியை அதிகாரிகள் முறையாக தூர்வாராத தால் தற்போது தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. ஏரிக்கரையும் பலப்படுத்தப்படாமல் உள்ளது. இதற்கிடையே சிலர் ஏரிக்கரையை வெட்டி படிக்கட்டுகளாக அமைத்துள்ளனர். மழை பெய்யும் போது, மண் அரிப்பு ஏற்படுவதால் கரை சேதமடையும் நிலை உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும், யாரும் பார்க்கக்கூட வரவில்லை. எனவே இந்த ஏரியை சீரமைத்து குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் ஏரிக்கரையில் மண் கரையாத வகையில் சிமெண்டால் ஆன படித்துறை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.