புகார்கள் எதிரொலியாக 2 இன்ஸ்பெக்டர்கள், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - வடக்குமண்டல ஐ.ஜி. நடவடிக்கை
வேலூரில் புகார்கள் காரணமாக 2 போலீஸ் இ்ன்ஸ்பெக்டர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி வடக்கு மண்டல ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.
வேலூர்,
மணல் கடத்தல், கஞ்சாவிற்பனை, குட்கா விற்பனை, சூதாட்டம் போன்றவற்றில் சில போலீஸ் நிலையங்களில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும், இதுகுறித்த தகவல்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கவனத்துக்கு கொண்டுசெல்லாமல் மறைத்துவிடுவதாகவும் புகார்கள் வந்தன.
கடந்தசில நாட்களுக்கு முன்பு வடக்கு மண்டல ஐ.ஜி.நாகராஜன் வேலூருக்கு வந்திருந்தார். அப்போது அவர் இதுகுறித்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வேலூர் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அசோகன், வேலூர் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோரை திடீரென காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி வடக்கு மண்டல ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதற்கான காரணத்தை அதிகாரிகள் கூற மறுத்து விட்டனர்.
இவர்களிடம் நுண்ணறிவுப்பிரிவு ஐ.ஜி. விசாரணை நடத்த இருப்பதாகவும், அதுவரை அவர்கள் காத்திருப்போர் பட்டியலில் இருப்பார்கள் என கூறப்படுகிறது.