உப்புக்கோட்டை பகுதியில் 2-ம் போக நெல் சாகுபடி பணிகள் தொடக்கம்
கம்பம் பள்ளத்தாக்கின் கடைமடை பகுதியான உப்புக்கோட்டையில் 2-ம் போக நெல் சாகுபடி பணிகள் தொடங்கியது.
உப்புக்கோட்டை,
தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கின் கடைமடை பகுதி என்பது குச்சனூர் அருகே உள்ள கூழையனூரில் தொடங்கி வீரபாண்டி மற்றும் பழனிசெட்டிபட்டி வரை சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. முல்லைப் பெரியாற்று பாசனம் மூலம் அப்பகுதியில் இரு போகம் நெல் சாகுபடி செய்வது வழக்கம். மேலும் இடைப்பட்ட காலங்களில் உளுந்து, பாசிப்பயறு, தட்டை பயறு போன்ற தானிய வகைகள் சாகுபடி செய்யப்படும். அதன்படி வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு ஓரளவு கைக்கொடுத்த நிலையில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போக நெல் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை பணிகள் முடிவடைந்தன. கம்பம் பள்ளத்தாக்கின் தொடக்க பகுதியில் 2-ம் போக நெல் சாகுபடி ஓரளவு நடைபெற்றது.
கம்பம் பள்ளத்தாக்கின் கடைமடை பகுதியை பொறுத்தமட்டில் முதல் போக நெல் அறுவடை பெரும்பாலான இடங்களில் முடிவடைந்துவிட்டது. ஒருசில பகுதிகளில் மட்டும் அறுவடை பணிகள் நடந்து வருகிறது. இந்தநிலையில் முல்லை பெரியாற்று நீர் கம்பம் பள்ளத்தாக்கின் கடைமடை பகுதி வரை போதுமான அளவு வந்து கொண்டு இருக்கிறது. இதனால் உப்புக்கோட்டை, சடையால்பட்டி, போடேந்திரபுரம் ஆகிய பகுதிகளில் தற்போது 2-ம் போக நெல் சாகுபடி பணி தொடங்கியுள்ளது. முல்லைப் பெரியாற்று நீர்வரத்து இன்னும் 2 மாதத்திற்கு இருந்தால் 2-ம் போக நெல் சாகுபடி நன்கு விளைச்சல் அடைவதுடன், நல்ல முறையில் அறுவடை செய்யலாம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.