ஆரணியில் ஜப்தி நடவடிக்கையிலிருந்து தப்புவதற்கு 2 மணி நேரம் நிறுத்தப்பட்ட அரசு பஸ் - பயணிகள் அவதி
ஜப்தி நடவடிக்கையிலிருந்து தப்புவதற்கு அரசு பஸ் 2 மணி நேரம் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.
ஆரணி,
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள களம்பூரை அடுத்த எட்டிவாடி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மனைவி மண்ணு (வயது 50), கடந்த 2008-ல் களம்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் தடம் எண்.17 என்ற எண்ணுள்ள டவுன் பஸ்சில் ஊருக்கு திரும்பினார்.அந்த பஸ் எட்டிவாடி சென்றதும் பஸ்சிலிருந்து மண்ணு இறங்குவதற்குள் பஸ் நகர்ந்து விட்டது.
இதனால் நிலைதடுமாறிய மண்ணு, கீழே தவறி விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் நஷ்டஈடு கேட்டு அவர் ஆரணி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த ஆரணி சார்பு நீதிபதி அரசு போக்குவரத்துக்கழகம், விபத்தில் காயம் அடைந்த மண்ணுவிற்கு நஷ்டஈடாக ரூ.1 லட்சத்து 72 ஆயிரத்து 627 வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார். ஆனால் அரசு போக்குவரத்துக்கழகம் நஷ்டஈடு வழங்கவில்லை.
இதனால் கடந்த டிசம்பர் மாதம் வட்டியுடன் ரூ.1 லட்சத்து 82 ஆயிரத்து 663-ஐ வழங்க அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்பின்னரும் நஷ்டஈடு வழங்கப்படவில்லை. இதனையடுத்து ஆரணியிலிருந்து சென்னை செல்லும் பஸ்சை ஜப்தி செய்யும்படி சார்புநீதிபதி வி.ஜெயவேல் உத்தரவிட்டார்.
அதன்பேரில் பஸ்சை ஜப்தி செய்வதற்காக நேற்று காலை 10 மணிக்கு ஆரணி பழைய பஸ் நிலையத்திற்கு கோர்ட்டு அமீனா உள்பட அலுவலர்கள் செல்ல இருந்தனர். அதற்குள் தகவல் அறிந்த போக்குவரத்துக்கழக அதிகாரிகள், சென்னைக்கு புறப்பட இருந்த பஸ்சை ஆரணி அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து வெளியே விடாமல் நிறுத்தி வைத்தனர். அந்த பஸ்சை எதிர்பார்த்து பஸ் நிலையத்தில் பயணிகள் காத்திருந்தனர். பின்னர் போக்குவரத்துக்கழக வக்கீல், கோர்ட்டு அமீனாவிடம் நஷ்டஈடு தொகையை உடனடியாக செலுத்தவிடுகிறோம். எனவே ஜப்தி நடவடிக்கையை எடுக்க வேண்டாம் என கூறி பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் ஆரணி பஸ் நிலையத்திற்கு சென்னை செல்லும் பஸ் பணிமனையிலிருந்து வந்தது. அந்த பஸ்சில் பயணிகள் ஏறி்க்கொண்டனர்.
ஆனால் நஷ்டஈடு தொகை செலுத்தப்படாததால் போக்குவரத்துக்கழக வக்கீல் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் வங்கி கணக்கிலிருந்து ரூ.1 லட்சத்து 56 ஆயிரத்திற்கான காசோலை, மண்ணு பெயருக்கு போக்குவரத்துக் கழகம் விடுவித்ததாக மண்ணுவிற்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.
அதன்பின் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள வந்தவர்கள் திரும்ப சென்றனர். அவர்கள் சென்றபின் சென்னை செல்லும் பஸ் போக்குவரத்துக்கழக பணிமனையிலிருந்து ஆரணி பஸ் நிலையத்திற்கு வந்தது. 2 மணி நேர தாமதத்துக்கு பின் பயணிகள் அந்த பஸ்சில் ஏறி சென்னை சென்றனர். இதனால் பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.