ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் புதிய பணியிடங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் - வணிக வரித்துறை கூடுதல் ஆணையர் பங்கேற்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிய பணியிடங்கள் குறித்து நடந்த ஆய்வுக்கூட்டத்தில் வணிகவரித்துறை கூடுதல் ஆணையர் லட்சுமிபிரியா கலந்து கொண்டு முன்னேற்ற நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
ராணிப்பேட்டை,
வேலூர் மாவட்டத்திலிருந்து பிரித்து புதிதாக ராணிப்பேட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் மற்றும் அரசின் அனைத்து துறைகளில் ஏற்படுத்தப்பட வேண்டிய புதிய பணியிடங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், உதவி கலெக்டர் இளம் பகவத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வணிகவரித்துறை கூடுதல் ஆணையரும், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலருமான ஜி.லட்சுமி பிரியா கலந்து கொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசுகையில், ‘‘புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளிலும் உருவாக்கப்பட வேண்டிய புதிய மற்றும் காலிப் பணியிடங்கள் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதா என்பதையும், அறிக்கை அனுப்பப்பட்டிருந்தால் அதை தனது கவனத்திற்கு கொண்டு வர வேண்டும், அறிக்கை அனுப்பாத துறைகள் மாவட்ட கலெக்டரின் ஒப்புதலோடு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். அதன் மீது தனி கவனம் செலுத்தி அரசிடமிருந்து விரைவாக அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
மேலும் ராணிப்பேட்டை மாவட்ட தொடக்க விழாவில் முதல்- அமைச்சர் அறிவித்த திட்டங்களின் தற்போதைய முன்னேற்ற நிலவரம் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். முன்னதாக ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்து, திருவலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு நலத்திட்ட உதவியாக சக்கர நாற்காலியை கூடுதல் ஆணையர் லட்சுமிபிரியா வழங்கினார். கூட்டத்தில் வேலூர் ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் மலர்விழி உள்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.