ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் கோவில் சாமி சிலைகள் உரியவரிடம் ஒப்படைப்பு

சென்னை பெரம்பூர், வீனஸ் பஸ் நிலையம் அருகில் இருந்த தண்டுமாரியம்மன் கோவில் சாமி சிலைகள் ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2020-01-04 22:30 GMT
திரு.வி.க. நகர்,

சென்னை பெரம்பூர், வீனஸ் பஸ் நிலையம் அருகில் இருந்த தண்டுமாரியம்மன் கோவிலை, சாலை விரிவாக்கம் பணிக்காக மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். கோவிலில் இருந்த சாமி சிலைகள் மற்றும் பொருட்களை திரு.வி.க.நகர் மண்டல அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்து இருந்தனர்.

கோவிலில் இருந்து எடுக்கப்பட்ட சாமி சிலைகள் தங்களுக்குத்தான் சொந்தம் என கோவில் நிர்வாகிகள் இருபிரிவினர் சொந்தம் கொண்டாடினர். இதுபற்றி இரு தரப்பினரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இதுபற்றி உரிய விசாரணை நடத்தி உரியவர்களிடம் சாமி சிலைகளை ஒப்படைக்கும்படி அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது.

அதன்பேரில் அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, கோவில் பொருட்கள் மற்றும் சாமி சிலைகளை அந்த கோவிலின் தர்மகர்த்தாவாக இருந்த கோதண்டம் (வயது 65) என்பவரிடம் ஒப்படைக்கும்படி திரு.வி.க.நகர் மண்டல அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தனர்.

இதையடுத்து பெரம்பூர் தாசில்தார் விஜயசாந்தி, திரு.வி.க.நகர் மண்டல அதிகாரி நாராயணன் உள்ளிட்டோர் கோவிலில் இருந்து எடுக்கப்பட்ட சாமி சிலைகள், பொருட்களை கோதண்டம் தரப்பினரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்