துமகூரு விவசாயிகள் மாநாட்டில் பிரதமரிடம் அதிருப்தியை வெளிப்படுத்தினேனா? முதல்-மந்திரி எடியூரப்பா விளக்கம்
துமகூரு விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடியிடம் அதிருப்தியை வெளிப்படுத்தி பேசியதாக வெளியான தகவலுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா விளக்கம் அளித்துள்ளார்.
பெங்களூரு,
துமகூருவில் விவசாயிகள் மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவரது முன்னிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா பேசினார். அவர் பேசுகையில், கர்நாடகத்தில் வெள்ள நிவாரண பணிகளுக்கு பலமுறை கேட்டும் கூட மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கவில்லை என்று கூறினார். பிரதமர் மீது எடியூரப்பா அதிருப்தியை வெளிப்படுத்தியதாக பரவலாக பேசப்பட்டது.
இதுகுறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இது எடியூரப்பாவுக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜனதா மேலிட தலைவர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் பேசிய இந்த கருத்துக்கு விளக்கம் அளித்து, முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:-
துமகூருவில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் நான், கர்நாடகத்தின் கோரிக்கைகளை, பிரச்சினைகளை முன்வைத்து பேசினேன். நிதி உதவி வழங்குமாறு பிரதமரிடம் கோரினேன். ஆனால் சில ஊடகங்கள் அதை திரித்து நான் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக செய்திகள் வெளியிட்டுள்ளன. கூட்டாட்சி தத்துவத்தில் இருக்கும் நாம், பிரதமர் முன்னிலையில் உண்மையை வெளிப்படுத்துவதில் எந்த தவறும் இல்லை.
கர்நாடகத்தின் முதல்-மந்திரியாக நான், மாநிலம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பிரதமரிடம் கூறினேன். வளர்ச்சி பணிகளுக்கு அதிக நிதி தேவை என்று கூறினேன். வெள்ள பாதிப்புகள், விவசாய விளைபொருள்களுக்கு ஆதரவு விலை வேண்டும் என்று கூறினேன். நீர்ப்பாசன திட்டங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் என்று கேட்டேன்.
அது விவசாயிகள் மாநாடு என்பதால், விவசாயம் சார்ந்த விஷயங்களை முன்வைத்து பேசினேன். பிரதமர் மோடி தொலைநோக்கு பார்வை கொண்டவர் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. ஏழைகள் மற்றும் விவசாயிகள் மீதான அவரது கவலை குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது. ஒட்டுெமாத்த உலக நாடுகள் அவரது செயல்பாடுகளை பாராட்டுகிறது. இத்தகைய சூழ்நிலையில் நான் பேசிய பேச்சுக்கு தவறான அர்த்தம் கற்பித்த ஊடகங்களின் செயல் சரியல்ல.
உண்மையில் சொல்லப்போனால், பிரதமர் ேமாடி தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசி, அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார். மேலும் டெல்லி வரும்படி அழைப்பு விடுத்துள்ள அவர், சம்பந்தப்பட்ட மந்திரிகளை சந்தித்து கர்நாடகத்தின் பிரச்சினைகளை எடுத்துக்கூறி உதவியை பெறுங்கள் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து விரிவான ஒரு அறிக்கையை தயாரிக்கும்படியும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அதனால் எனது பேச்சுக்கு தவறான அர்த்தம் கற்பிக்க வேண்டாம். மாநிலத்தின் வளர்ச்சிக்காக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எனது இந்த கருத்தை ஊடகங்கள் ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறேன். இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.