குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் - மேலூரில் கடைகள் அடைப்பு

தேசிய குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு சட்டங்களை வாபஸ் பெறக்கோரி மேலூரில் கடைகள் அடைக்கப்பட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2020-01-03 22:30 GMT
மேலூர்,

தேசிய குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு சட்டங்களை வாபஸ் பெறக்கோரி மேலூர் மற்றும் சுற்றி உள்ள தாலுகாவில் அனைத்து கிராம மக்கள், அரசியல் கட்சியினர், அனைத்து வர்த்தக சங்கத்தினர், ஆட்டோ மற்றும் வாடகை வாகனங்களின் ஓட்டுனர் சங்கம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் ஜமாத் சார்பில் சந்தித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க ஆதரவு திரட்டப்பட்டது. இதையடுத்து நேற்று மேலூரில் காலை முதல் மாலை 5 மணிவரை கடை அடைப்பு நடைபெற்றது.

மேலூர் பஸ் நிலையம் அருகே ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேசிய கொடிகளுடனும், மிக நீண்ட தேசிய கொடியுடனும் முஸ்லிம் வாலிபர்கள் கலந்துகொண்டனர். காங்கிரஸ், தி.மு.க., அ.ம.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , விடுதலை சிறுத்தைகள் கட்சி, அனைத்து இஸ்லாமிய அமைப்பினர், கட்சியினர்,பொதுமக்கள், பல்வேறு அமைப்பினரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். முகைதீன் ஆண்டவர் பெரிய பள்ளிவாசல் தலைவர் ஹாஜி சேக்தாவூத் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், தி.மு.க. நகர் செயலாளர் ஹாஜி முகமதுயாசின், காங்கிரஸ் கட்சி வடக்கு மாவட்ட தலைவர் ஆலாத்தூர்ரவி , பொருளாளர் நூர்முகமது, பொதுக்குழு உறுப்பினர் திலகராஜ், விவசாய அணி மாநில தலைவர் சோமசுந்தரம், அ.ம.மு.க. நகர் செயலாளர் நாகசுப்பிரமணி, அன்புக்கரசு, காரல்மார்க்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர்ஆற்றலரசு, நிர்வாகி அய்யாவு, திராவிடக்கழக மதுரை மாவட்ட பொதுச்செயலாளர் மணி அமுதன், எஸ்.டி.பி.ஐ . மதுரை புறநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜியாவுதீன, இந்திய தேசிய லீக் கட்சி பொதுச்செயலாளர் சீனிஅகமது உள்பட அரசியல் கட்சியினரும், நிர்வாகிகளும் பங்கேற்றுதேசிய குடியுரிமை திருத்த சட்டம் வாபஸ் பெறக்கோரி கண்டன உரையாற்றினர். முன்னதாக பெரிய பள்ளிவாசலில் இருந்து அனைவரும் ஊர்வலமாக வந்தனர்.

மேலும் செய்திகள்