ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், ரூ.790 கோடிக்கான பணிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது - கலெக்டர் சண்முகசுந்தரம் பேட்டி

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.790 கோடிக்கான பணிகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

Update: 2020-01-03 22:15 GMT
வேலூர், 

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் கோட்டையை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடைபெற்று வரும் கோட்டை அகழியை தூர்வாரும் பணிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் உடன் இருந்தார்.

ஆய்வுக்குப் பிறகு கலெக்டர் சண்முகசுந்தரம் கூறியதாவது:-

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 29 பணிகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு சில பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பீடு ரூ.1,000 கோடி ஆகும். அதில் ரூ.910 கோடிக்கு விரிவான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு ரூ.790 கோடிக்கான பணிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் குடிநீர் வினியோகம் மற்றும் பாதாள சாக்கடை திட்டம் முக்கியமானதாக செயல்படுத்தப்படுகிறது. மேலும் ஸ்மார்ட் சாலை, புதிய பஸ் நிலையம் புதுப்பித்தல், பல அடுக்கு கார் பார்க்கிங் உள்ளிட்ட பொது மக்களுக்கு அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

வேலூர் கோட்டை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இங்கே அவர்களிடம் கலந்து ஆலோசித்து அவர்கள் என்னென்ன நிபந்தனைகள் விதிக்கிறார்கள் என்பதை கேட்டறிந்து ஸ்மார்ட் சிட்டி பணிகளை ஆரம்பிக்க அனுமதி கொடுத்துள்ளனர்.

அதன்படி கோட்டை அகழி தூர்வாரும் பணி நடக்கிறது. பாதாள சாக்கடை திட்டம் நான்கு நிலைகளில் நடைபெற்று வருகிறது. முதல் நிலைகளில் 24 வார்டுகளில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பள்ளம் தோண்டும் போதே குடிநீர் வாரியம் சார்பில் குடிநீர் இணைப்புக்கான பணிகளும் நடைபெறுகிறது. எனவே இரண்டு பணிகளும் முழுமையாக முடிந்த பிறகு சாலை சீரமைக்கப்படும். இதனால் பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

பாதாள சாக்கடை திட்டம் என்பது ஒரு நீண்ட காலம் செயல்படுத்தக் கூடிய திட்டமாகும். இரண்டு, மூன்று வருடங்கள் சிரமம் இருக்கும். 2021 இறுதியில் தான் பணிகள் நிறைவுபெறும். பணிகள் முடிந்த பிறகு எந்த கழிவுநீரும் பாலாற்றில் கலக்காது. இது போன்று பெரிய பெரிய திட்டங்களை செயல்படுத்தும்போது பொதுமக்களுக்கு சில இடையூறுகள், சிரமம் வரத்தான் செய்யும். பொது மக்கள் அதை பொறுத்துக் கொள்ளவேண்டும். கோட்டையில் பொழுதுபோக்கு அம்சம் அதிகரிக்கும் வகையில் வாக்கிங் ட்ராக், ஆம்பியர் தியேட்டர், கேலரி உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்..

அப்போது மாநகராட்சி பொறியாளர் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்