மாவட்ட ஊராட்சி 19-வது வார்டு தேர்தல்: சேலத்தில் நீண்ட இழுபறிக்கு பின் தி.மு.க. வேட்பாளர் வெற்றி

சேலத்தில் மாவட்ட ஊராட்சி 19-வது வார்டு தேர்தலில் நீண்ட இழுபறிக்கு பின் தி.மு.க. வேட்பாளர் கீதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக அதிகாரிகளுடன் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Update: 2020-01-03 22:30 GMT
சேலம், 

சேலம் ஊராட்சி ஒன்றியத்தில் 19-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவி, 10 ஒன்றிய கவுன்சிலர் பதவி, 14 ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை சேலம் சித்தனூர் காயத்ரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தொடங்கியது. இதைத்தொடர்ந்து நடந்த இந்த ஓட்டு எண்ணிக்கை நேற்று மதியம் வரை நீடித்தது.

அதாவது 14 ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் மற்றும் 10 ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நிலையில் 19-வது வார்டுக்கான மாவட்ட கவுன்சிலர் தேர்தலை முடிவை அறிவிப்பதில் நீண்ட இழுபறி ஏற்பட்டது.

அ.தி.மு.க. வேட்பாளர் லட்சுமி ராஜூ, தி.மு.க. வேட்பாளர் கீதா குணசேகரன் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. நேற்று காலை 8 மணிக்கு வாக்குகள் அனைத்தும் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் தி.மு.க. வேட்பாளர் கீதாகுணசேகரன் 350 வாக்குகள் அதிகம் பெற்றிருந்ததாக தகவல் வெளியானது.

ஆனால் தேர்தல் முடிவு விவரம் அறிவிக்காமல் அதிகாரிகள் காலதாமதம் செய்து வருவதாகவும், அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் அதிகாரிகளை கட்டாயப்படுத்தி வருவதாகவும் தி.மு.க.வினர் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள், வாக்கு எண்ணும் மையத்தில் இருந்த அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வார்டு வாரியாக எண்ணப்பட்ட வாக்குகளை மீண்டும் கூட்டி சரிபார்க்கும் பணி நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் விஜய்பாபு முன்னிலையில் உதவி தேர்தல் அலுவலர் நாகபசுபதி மற்றும் அதிகாரிகள் 19-வது வார்டில் போட்டியிட்ட மொத்த வேட்பாளர்களின் வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து நீண்ட நேரம் நடந்த இழுபறிக்கு பின் மதியம் 1 மணிக்கு தேர்தல் நிலவரத்தை அதிகாரிகள் அறிவித்தனர். தி.மு.க. வேட்பாளர் கீதா குணசேகரன் 187 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தி.மு.க. வேட்பாளர் 25,623 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் 25,436 வாக்குகளும் பெற்றிருந்தனர். மொத்த வாக்குகள் 58,049 ஆகும். இதில், 3,672 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது. 19-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் தி.மு.க.வேட்பாளர் கீதாகுணசேகரிடம் அதிகாரிகள் வழங்கினர். இதையடுத்து வாக்கு எண்ணும் மையம் முன்பு திரண்டிருந்த தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் தலைமையில் அங்கு நின்றிருந்த தி.மு.க. நிர்வாகிகள், தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர் கீதா குணசேகரனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்