மேட்டுப்பாளையத்தில் வாக்கு எண்ணிக்கை : அ.தி.மு.க.- தி.மு.க.வினர் மோதல் - போலீசார் தடியடி
மேட்டுப்பாளையத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற போது அ.தி.மு.க.- தி.மு.க.வினர் மோதலில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் தடியடி நடத்தினர்.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை காரமடை அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று காலை வரை நடைபெற்றது.
இதில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் தோலம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பூத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற போது தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.வினர் வந்து அதிகாரிகளிடம் பேசி கொண்டிருந்தனர்.
அப்போது அ.தி.மு.க.- தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இருதரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், இருதரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவின் போது பெண் போலீஸ் ஒருவர் திடீரென்று கீழே விழுந்தார்.
இதனால் நிலைமை மோசமானதால் போலீசார் தடியடி நடத்தி வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வெளியேற்றினர். இதன் காரணமாக வாக்கு எண்ணும் பணி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.