நண்பரை கொன்ற வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை - கிரு‌‌ஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு

காவேரிப்பட்டணம் அருகே நண்பரை கொன்ற வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கிரு‌‌ஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2020-01-03 22:30 GMT
கிரு‌‌ஷ்ணகிரி, 

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி மேல்வீதியை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் மதியழகன் (வயது 19). இவரும், கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தடிக்கல் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அன்புசெல்வன் (19), காவேரிப்பட்டணம் அருகே உள்ள தட்டரஹள்ளி சோபனூர் காலனியை சேர்ந்த 17 வயதுடைய 2 வாலிபர்களும் நண்பர்கள் ஆவார்கள்.

இவர்கள் அடிக்கடி கிரிக்கெட் விளையாட செல்வார்கள். அந்த கிரிக்கெட் அணியின் கேப்டன் மதியழகன் ஆவார். கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் ரூ.4 ஆயிரம் பரிசு தொகை கிடைத்தது. அதில் ரூ.2 ஆயிரத்தை மதியழகன் எடுத்து கொண்டார். மற்ற தொகையை அன்புசெல்வன் உள்ளிட்ட 3 பேருக்கும் பிரித்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. மேலும் அன்புசெல்வன் - மதியழகன் இடையே ரூ.10 ஆயிரம் கொடுக்கல் - வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. மேலும் அன்புசெல்வன் பழகி வந்த பெண்ணிடம், மதியழகன் பேசியதாக கூறப்படுகிறது. அது தொடர்பாகவும் அவர்களுக்குள் தகராறு எழுந்தது. இந்த நிலையில் தகராறு முற்றியதில் கடந்த 3.7.2011 அன்று தட்டரஹள்ளி சோபனூர் முனியப்பன் காலனி அருகில் மதியழகனை அரிவாளால் அன்புசெல்வன் வெட்டிக் கொலை செய்தார்.இது தொடர்பாக அன்புசெல்வனை போலீசார் கைது செய்தனர். பின்னர் 17 வயதுடைய 2 வாலிபர்களும் கைது செய்யப்பட்டனர். இதில் அன்புசெல்வன் மீதான கொலை குற்றச்சாட்டு மட்டும் கிரு‌‌ஷ்ணகிரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. மற்றவர்கள் 2 பேரும் 17 வயது என்பதால் அவர்கள் மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த கொலை வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட அன்புசெல்வனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அதனை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் பாஸ்கர் ஆஜர் ஆகி வாதாடினார்.

மேலும் செய்திகள்