பக்காசூரன் மலை காட்சிமுனைக்கு செல்ல தடை, வனத்துறையினர் அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
பக்காசூரன் மலை காட்சிமுனைக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
குன்னூர்,
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் பக்காசூரன் மலை உள்ளது. இந்த மலையில் பக்காசூரன் இருந்ததாகவும், அவருடைய கால் பாதம் பாறையில் பதிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் திப்பு சுல்தான் சுரங்கப்பாதையை இந்த இடத்தில் அமைத்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.
பக்காசூரன் மலை காட்சி முனையில் அமைக்கப்பட்ட காட்சி கோபுரத்தில் இருந்து பார்த்தால் பில்லூர் அணை, பவானி ஆறு, மேட்டுப்பாளையம் சிறுமுகை போன்ற பகுதிகள் ரம்மியமாக தெரியும். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த காட்சிமுனைக்கு சுற்றுலா பயணிகள் வந்து சென்றார்கள். அதன்பின்னர் நான்சச் பகுதியில் இருந்து பக்காசூரன் மலை காட்சி முனை வரை சாலை வசதி இல்லாமல் இருந்தது. ஆனால் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வந்து கொண்டு இருந்தனர்.
இந்தநிலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள், நான்சச் முதல் பக்காசூரன் மலை வரை சாலை வசதி அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இதன் மூலம் நான்சச் முதல் பக்காசூரன் மலை வரை சாலை வசதி அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் பக்காசூரன் மலை இயற்கை காட்சிமுனையை காண அதிகஅளவில் வந்தனர்.
ஆனால் தற்போது வனத்துறையினர் பக்காசூரன் மலை காட்சிமுனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து உள்ளனர். மேலும் இந்த பகுதியில் பாதுகாப்பு கேட் அமைக்கப்பட்டது. இதனால் இந்த பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பக்காசூரன் மலை காட்சி முனையை காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், ‘பக்காசூரன் மலை காட்சிமுனையில் இருந்து இயற்கை அழகை கண்டு ரசிக்க நீண்ட தொலைவில் இருந்து வருகிறோம். ஆனால் திடீரென வனத்துறையினர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தடைவிதித்து உள்ளனர். இதனால் நாங்கள் பக்காசூரன் மலை காட்சிமுனையை பார்க்க முடியாமல் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. அதனால் இந்த சுற்றுலா தளத்தை திறந்துவிட்டால் அரசுக்கு வருமானம் கிடைக்கும்.
எனவே வனத்துறையினர், பக்காசூரன் மலை இயற்கை காட்சி முனையை கண்டு ரசிப் பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.