அரக்கோணம் அருகே, மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் சாவு
அரக்கோணம் அருகே மின்சாரம் தாக்கியதில் வடமாநில வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அரக்கோணம்,
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சூரஜ் (வயது 24). இவர் சென்னையில் உள்ள கோழிக்கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று அதிகாலை சென்னையில் இருந்து மினிவேனில் டிரைவருடன் அரக்கோணம் அருகே காவனூர், நரசிங்கபுரத்தில் உள்ள கோழிப்பண்ணைக்கு வந்தார். பின்னர் கோழிகளை வேனில் ஏற்றி கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
அப்போது சூரஜ் வேனின் மேல்கூரையில் அமர்ந்து இருந்தார். நரசிங்கபுரம் அருகே வேன் சென்று கொண்டிருந்த போது தெருவில் சென்று கொண்டிருந்த மின்கம்பி சூரஜ் மீது உரசியது. இதில் சூரஜ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.