கேளம்பாக்கம் அருகே மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

கேளம்பாக்கம் அருகே மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2020-01-02 22:45 GMT
திருப்போரூர்,

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே உள்ள சாத்தங்குப்பம் கிராமம் சென்னைக்கு அருகே உள்ள முக்கிய புறநகர் பகுதியாக மாறிவருகிறது. இங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் பெய்த கன மழையால் சாத்தாங்குப்பம் கிராமம் ஸ்ரீ நகர், கணபதி நகர், கனக பரமேஸ்வரி நகர், லட்சுமி அவென்யூ, சீனிவாசன் நகர், சண்முக நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலை மட்டுமல்லாமல் வீடுகளிலும் மழைநீர் புகுந்து பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.

அவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக மழை வெள்ளத்தில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த பகுதியில் முறையான சாலைவசதி, கால்வாய்கள் இல்லை. இதனால், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்து வெளியேற வழியில்லாமல், காலியாக உள்ள மனைகளிலும், காலி இடங்களிலும் கழிவுநீர் மழைநீருடன் தேங்கி நிற்கிறது.

இதனால் அந்த பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபராயம் உள்ளது. அந்த பகுதி மக்களுக்கு மழைநீர் கால்வாய் அமைத்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது சம்பந்தமாக பலமுறை அதிகாரியிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று அந்த பகுதி மக்கள் வீராணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தகட்ட போராட்டமாக சென்னை- திருப்போரூர் சாலையான பழைய மாமல்லபுரம் சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்