காண்டிராக்டர் கொலையில் வாலிபர் கைது தலைமறைவாக உள்ள 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

பூதப்பாண்டி அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காண்டிராக்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும், தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.;

Update: 2020-01-02 22:15 GMT
பூதப்பாண்டி,

பூதப்பாண்டி அருகே தெரிசனங்கோப்பு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 42), காண்டிராக்டர். இவரது உறவினர் பெண்ணை அம்பலத்துருத்தி பகுதியை சேர்ந்த தேவானந்த் (21) காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு ஆனந்த் எதிர்ப்பு தெரிவித்து தேவானந்தை கண்டித்தார். இதனால், அவர்கள் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று ஆனந்தும், அருள்தாசும் அம்பலத்துருத்தி பகுதியில் சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது தேவானந்த் உள்பட 4 பேர் அங்கு வந்து சாலையில் நின்று கொண்டிருந்த ஆனந்த், அருள்தாசிடம் தகராறு செய்தனர். திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவர்கள் 2 பேரையும் சரமாரியாக குத்தினர். இதில் ஆனந்தும், அருள்தாசும் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனந்த் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும், அருள்தாஸ் தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஆனந்த் சிகிச்சை பலனின்றி இறந்தார். அருள்தாசுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப் படுகிறது.

வாலிபர் கைது

இந்த கொலை குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த தேவானந்த் உள்பட 4 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய அம்பலத்துருத்தியை சேர்ந்த அருள்குமரன் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ேமலும், தலைமறைவாக உள்ள தேவானந்த் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்