எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கண்டனம்:‘பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மீதான அத்துமீறல்களை கண்டிக்காதது ஏன்?’

2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி நேற்று கர்நாடகம் வந்தார். துமகூருவில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் எதிர்க்கட்சிகள் பாகிஸ்தானில் நடக்கும் சிறுபான்மையினர் மீதான அத்துமீறலை கண்டிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2020-01-02 23:30 GMT
பெங்களூரு,

2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி நேற்று கர்நாடகம் வந்தார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு வந்த பிரதமர் மோடி பகல் 1 மணியளவில் பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் வந்து இறங்கினார். அவருக்கு முதல்-மந்திரி எடியூரப்பா சால்வை, மைசூரு தலைப்பாகை அணிவித்து வரவேற்றார். மேலும் மத்திய மந்திரிகள் சதானந்தகவுடா, பிரகலாத்ஜோஷி உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர்.

அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் துமகூருவுக்கு வந்தார். அங்கு சித்தகங்கா மடத்திற்கு சென்று, மறைந்த மடாதிபதி சிவக்குமார சுவாமியின் சமாதியில் தீபங்களை ஏற்றி மரியாதை செலுத்தினார். அங்கு சிவக்குமார சுவாமி பயன்படுத்திய பொருட்கள் வைக்கும் கட்டிட கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேசினார். அவர் கன்னடத்திலேயே பேச்சை தொடங்கினார். அதன் பிறகு இந்தியில் தனது உரையை ஆற்றினார். அவர் ேபசும்போது கூறியதாவது:-

இந்த புத்தாண்டு தொடக்கத்தில் துமகூரு சித்தகங்கா மடத்திற்கு வருகை தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கர்நாடக மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொள் கிறேன். சிவக்குமார சுவாமி, உடல் ரீதியாக நம்முடன் இல்லாதது எனக்கு வருத்தம் அளிக்கிறது. அவரது பொருட்களை வைப்பதற்கான கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் நான் பங்கேற்றது எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன்.

சமீபத்தில் பெஜாவர் மடாதிபதி விஸ்வேசுவர தீர்த்த சுவாமி நம்மை விட்டு விலகி சென்றுவிட்டார். இத்தகைய மடாதிபதிகள் நமக்கு வகுத்து கொடுத்த வழியில் நாம் பயணிக்க வேண்டும். நாட்டை செழித்தோங்க செய்ய வேண்டும். இதில் அனைவருக்கும் பங்கு இருக்கிறது. அதனால் நாட்டை பலமான நாடாக உருவாக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.

பாகிஸ்தான் மதம் சார்ந்த நாடு. இதனால் அங்கு சிறுபான்மையின அதாவது இந்து, சீக்கியர்கள், ஜெயின், கிறிஸ்துவர்கள் மீது அத்துமீறல்கள் அதிகரித்து இருக்கின்றன. இதனால் அந்த மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். இதனால் அவர்களில் பலர் இந்தியாவில் வந்து தஞ்சம் அடைந்தனர். அந்த மக்கள் தங்களின் மதம், உயிர், பெண் குழந்தைகளை பாதுகாக்க நமது நாட்டிற்குள் வந்துள்ளனர். அவர்களுக்கு உதவி செய்வது நமது கடமை. தஞ்சம் அடைந்தவர்களை பாதுகாப்பது நமது கலாசாரம்.

ஆனால் இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் மக்களின் கவனத்தை திசை திருப்ப வீதியில் இறங்கி போராட்டம் நடத்துகின்றன. இந்த சிறுபான்மையின மக்களை பாதுகாக்கவும், பாலியல் தொல்லையில் இருந்து பெண்களை பாதுகாக்கவும் அரசு எடுத்துள்ள முயற்சியை கண்டித்து காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. ஆனால் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் இந்த கட்சிகள் பாகிஸ்தானில் நடக்கும் சிறுபான்மையினர் மீதான அத்துமீறலுக்கு எதிராக பேசாமல் இருப்பது ஏன்?. அதனை கண்டிக்காமல் இருப்பது ஏன்?. அந்த கட்சிகளை பாகிஸ்தானுக்கு எதிராக பேசாமல் தடுப்பது எது?.

நாடாளுமன்றத்தில் இந்த வரலாற்று சிறப்புமிக்க குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிராக போராடுகின்றன. எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பாகிஸ்தானில் இருந்து வந்த இந்து, சீக்கியர்கள், கிறிஸ்துவ மக்களை இந்தியா கைவிடாது. அவர்களை பாதுகாப்பது நமது நாட்டின் கடமை.

பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டவும், காஷ்மீரில் நிலவும் ஸ்திரமற்ற நிலையை தடுக்கவும் 370-வது பிரிவை நீக்கினோம். எங்கள் அரசு பாரபட்சமின்றி பகல்-இரவு என்று பாராமல் மக்களின் நலனுக்காக பாடுபட்டு வருகிறது. ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்த எங்கள் அரசு பணியாற்றி வருகிறது. சுகாதார காப்பீடு, சமையல் கியாஸ் இணைப்பு, வீடு, மின்சார இணைப்பு உள்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது அரசின் பணியாகும். அந்த பணியை நாங்கள் செய்து வருகிறோம்.

மகாத்மா காந்தியின் 150-வது ஜெயந்தியையொட்டி திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டியது அவசியம். இதற்காக நாம் திடமான நடையை எடுத்து வைக்க வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.

மேலும் செய்திகள்