ஊரக உள்ளாட்சி தேர்தல்: ஓட்டுச்சீட்டுகளை பிரித்து எண்ணியதில் தாமதம் வேட்பாளர்களின் முகவர்கள் வாக்குவாதம்

திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஓட்டுச்சீட்டுகளை பிரித்து எண்ணியதில் தாமதம் ஏற்பட்டதால் வேட்பாளர்களின் முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-01-02 23:00 GMT
திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் முதல் கட்டமாக அந்தநல்லூர், மணப்பாறை, மணிகண்டம், மருங்காபுரி, திருவெறும்பூர், வையம்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த டிசம்பர் மாதம் 27-ந் தேதி தேர்தல் நடந்தது.

தொடர்ந்து லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, புள்ளம்பாடி, தா.பேட்டை, தொட்டியும், துறையூர், உப்பிலியபுரம் ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த 30-ந் தேதி தேர்தல் நடந்தது. ஓட்டுப்பெட்டிகள் அனைத்தும் அந்தந்த ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதியில் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ேமலும் ஓட்டுப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கை மையங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.

ஓட்டுப்பெட்டிகள்

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் 14 மையங்களிலும் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குப்பெட்டிகள் சேதுராப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தது. அந்த மையத்தில் கலெக்டர் சிவராசு முன்னிலையில் முதலில் தபால் ஓட்டுகள் பிரிக்கப்பட்டன. அதன்பின் ஓட்டுப்பெட்டிகள் இருந்த அறையில் சீல் அகற்றப்பட்டு திறக்கப்பட்டன. அதில் இருந்து ஓட்டுப்பெட்டிகள், வாக்குச்சீட்டுகளை வகைப்படுத்தும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு 45 மேஜைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முன்னிலையில் ஓட்டுப்பெட்டிகள் திறக்கப்பட்டு அதில் இருந்த ஓட்டுச்சீட்டுகள் வகைப்படுத்தப்பட்டன. அதாவது கிராம ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள், கிராம ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர்கள், மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் தேர்தலுக்கு வாக்களித்த ஓட்டுகளை தனித்தனியாக பிரிக்கப்பட்டன. வெள்ளை, இளஞ்சிவப்பு, பச்சை, மஞ்சள் நிற ஓட்டுச்சீட்டுகள் தனித்தனியாக தலா 50 எண்ணிக்கையில் பிரித்து அதனை ரப்பர் பேண்ட் மூலம் ஊழியர்கள் கட்டினர்.

வாக்கு எண்ணிக்கை தாமதம்

ஒவ்வொரு மேஜையிலும் 4 ஓட்டுச்சீட்டுகளும் வகைப்படுத்தப்பட்ட பின் வாக்கு எண்ணிக்கை அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதிலும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் ஓட்டு எண்ணிக்கை தனித்தனி அறையில் நடந்தது.

வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் முன்னிலையில் வாக்குச்சீட்டுகள் பிரிக்கப்பட்டன. இதேபோல வாக்கு எண்ணிக்கை அறையில் ஊழியர்கள் ஓட்டுச்சீட்டுகளை பிரித்து எண்ணும் போது அதில் பதிவாகி இருந்த சின்னங்களை முகவர்களை நோக்கி காண்பித்து எண்ணினர். இவ்வாறு ஒவ்வொரு முறையும் ஓட்டுச்சீட்டுகளை பிரித்து காண்பித்த போது வாக்கு எண்ணிக்கை தாமதமானது. முதல் சுற்று முடிவுகள் வெளிவர நீண்ட நேரம் ஆனது.

வாக்குவாதம்

அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் பேரூர் காவேரி என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்தது. இதில் ஓட்டுச்சீட்டுகளை பிரித்து எண்ணியதில் தாமதமானதால் வேட்பாளர்களின் முகவர்கள், தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். மேலும் ஓட்டுச்சீட்டுகள் வகைப்படுத்தப்பட்ட பின் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு வரவும் தாமதமானதால் முகவர்கள் ஆத்திரமடைந்தனர். இதேபோல மற்ற வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதமானது. ஒவ்வொரு சுற்று முடிவுகள் முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை விவரம் ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டன. மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் வாக்கு எண்ணிக்கை முடிவு அறிவிக்க நீண்ட நேரமானது.

பலத்த சோதனை

தேர்தல் முடிவுகளை அறிய அரசியல் கட்சியினர், வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்கள் முன்பு திரண்டிருந்தனர். வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வெளியே வந்த போது அவர்களது ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்து உற்சாகமடைந்தனர். மேலும் வெற்றி பெற்றவர்களை தோளில் தூக்கி வைத்து ஊர்வலமாக சென்றனர். வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

வாக்கு எண்ணிக்கை மையத்திலும், வெளிப்பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாகனங்களை குறிப்பிட்ட தூரத்திற்கு முன்பே போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் வேட்பாளர்களின் முகவர்களை பலத்த சோதனைக்கு பின் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதித்தனர். அடையாள அட்டை இல்லாதவர்களை வெளியே அனுப்பினர்.

கண்காணிப்பு கேமராக்கள்

வாக்கு எண்ணிக்கை மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கை மையங்களை தேர்தல் பார்வையாளர் கணேஷ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் செய்திகள்