தொட்டபெட்டா தேயிலை பூங்காவில் மலர் செடிகள் நடவு பணி தொடக்கம்

தொட்டபெட்டா தேயிலை பூங்காவில் மலர் செடிகள் நடவு பணி தொடங்கி உள்ளது.

Update: 2020-01-02 22:15 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தொட்டபெட்டா பகுதியில் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான தேயிலை பூங்கா உள்ளது. 10½ ஏக்கர் பரப்பளவில் பூங்கா பரந்து, விரிந்து காணப்படுகிறது. மலை மாவட்டமான நீலகிரியின் முக்கிய பொருளாதாரமாக விளங்கும் தேயிலை விவசாயத்தை பிரதிபலிக்கும் வகையில் தேயிலை தோட்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. தேயிலை செடிகள் பச்சை, பசேல் என இளந்தளிர்களுடன் காட்சி அளிக்கிறது.

நடைபாதை வழியாக சுற்றுலா பயணிகள் நடந்து சென்று ஓய்வெடுக்கும் வகையில் நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தேயிலை தோட்டத்தின் நடுவே புகைப்படம் எடுத்து மகிழ்கிறார்கள். பச்சை தேயிலை பறிப்பது, எவ்வாறு தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறித்து கேட்டு தெரிந்துகொள்கின்றனர். சுற்றுலா பயணிகளின் குழந்தைகள் விளையாடுவதற்காக சறுக்கு, ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் உள்ளன.

மலர் செடிகள், அலங்கார செடிகள் சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இயற்கை எழில் மிகுந்த இடத்தில் அமைந்து உள்ள தேயிலை பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. வருகிற ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெற உள்ளது.

இதையொட்டி பூங்காவில் மலர் செடிகள் நடவு செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை நடைபாதை ஓரங்கள், மலர் பாத்திகள், நிழற்குடைகளை சுற்றிலும் பூங்கா பணியாளர்கள் நடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

நர்சரியில் வளர்த்து பராமரிக்கப்பட்ட மலர் செடிகள் நடவு செய்யப்படுகிறது. பால்சம், டெல்பீனியம், பிரெஞ்சு மேரிகோல்டு, பெட்டுனியா, பேன்சி டீலக்ஸ், வெர்பினா, கேலண்டுலா, கிரைசாந்திமம், டையான்தஸ், சால்வியா, டெய்சி, ஆஸ்டர், ஐரீ‌‌ஷ் உள்பட 30 ரகங்களை சேர்ந்த 1 லட்சத்து 40 ஆயிரம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. பனிப்பொழிவில் செடிகள் பாதிக்காமல் இருக்க கோத்தாரி மலர் செடிகளை கொண்டு பாதுகாக்கப்படுகிறது.

இந்த செடிகளில் ஏப்ரல் மாதத்தில் பல வண்ணங்களில் பூக்கள் பூக்க தொடங்கும். இது கோடை சீசனில் வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவர உள்ளது.

மேலும் செய்திகள்