மாநில தேர்தல் ஆணையரை நீக்க மத்திய அரசுக்கு அதிகாரமில்லை - முதல்- அமைச்சர் நாராயணசாமி திட்டவட்டம்
மாநில தேர்தல் ஆணையரை நீக்க மத்திய அரசுக்கு அதிகாரமில்லை. இதுதொடர்பான கவர்னரின் கடிதத்தை குப்பையில் போடவேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரி,
உள்ளாட்சி தேர்தலை நடத்தும் மாநில தேர்தல் ஆணையர் தொடர்பாக கவர்னர் கிரண்பெடியின் புகாரின்பேரில் மத்திய உள்துறை அமைச்சகம் புதுவை அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளது. அந்த கடிதத்தில் தலைமை செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைத்து மாநில தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்க கூறப்பட்டுள்ளது.
மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட ஒருவரை நீக்க உள்துறை அமைச்சகத்துக்கோ, கவர்னருக்கோ அதிகாரம் இல்லை. புதுவை பஞ்சாயத்துராஜ் சட்டத்தின்படி அவரை நீக்க ஒரு நீதிபதியை நீக்குவதற்கு என்ன நடைமுறை கடைபிடிக்க வேண்டுமோ அதே நடைமுறை கடைபிடிக்கப்பட வேண்டும்.
தற்போதைய மாநில தேர்தல் அதிகாரி சட்டசபையில் சபாநாயகர் உத்தரவின் பேரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்.
மத்திய அரசின் தற்போதைய அறிவுறுத்தல் வரும் காலங்களில் மாநில தேர்தல் ஆணையரை நியமிப்பதற்காக அனுப்பப்பட்டதாக நான் நினைக்கிறேன். எனவே மாநில தேர்தல் ஆணையர் தொடர்பாக கவர்னரின் கடிதத்தை குப்பையில்தான் போடவேண்டும்.
மாநில அரசால் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர் வாக்காளர் பட்டியல் தயாரிப்பது, அதிகாரிகளை நியமிப்பது போன்ற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பணிகளை தொடங்கி செய்து வருகிறார்.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுவையில் மாநில தேர்தல் ஆணையரை நியமிக்க உள்ளாட்சித்துறை கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. அதில் இந்தியாவில் எந்த பகுதியில் வசிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.
அந்த சமயத்தில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்த பிரச்சினை வெடித்தது. கவர்னர் உத்தரவின் பேரிலேயே இதுபோன்ற அறிவிப்பு வெளியிடப்பட்டதாக எம்.எல்.ஏ.க்கள் குற்றஞ்சாட்டினார்கள்.
இதைத்தொடர்ந்து உள்ளாட்சித்துறையின் அறிவிப்பினை சபாநாயகர் சிவக்கொழுந்து ரத்துசெய்து உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அரசின் தேர்வு அடிப்படையில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டமன்றத்திலேயே முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.