ஐகோர்ட்டு தீர்ப்பு வரும்வரை காத்திருங்கள் - நாராயணசாமிக்கு கிரண்பெடி பதிலடி
அதிகாரம் தொடர்பாக ஐகோர்ட்டு தீர்ப்பு வரும்வரை காத்திருங்கள் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பெடி பதிலடி கொடுத்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கவர்னர் கிரண்பெடி போட்டி அரசாங்கம் நடத்துவதாகவும், எதிர்க்கட்சிகளை தூண்டிவிட்டு மனுக்கள் பெறுவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
அதிகாரம் தொடர்பாக வழங்கப்பட்ட உத்தரவிற்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அதன் மீதான தீர்ப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இறுதி தீர்ப்பு வரும் வரை காத்திருப்பது நல்லது.
நான் பணம் வீணடிக்கப்படுவது, மாற்று திட்டங்களுக்கு பயன்படுத்தப்படாமல் காத்து வருகிறேன். மத்திய அரசின் கொள்கைப்படி பயனாளிகளுக்கு அவர்களது வங்கிக்கணக்கில் பணம் சென்று சேர செய்கிறோம். இதனால் இழப்பின்றி அவர்கள் முழு தொகையையும் பெற முடிகிறது.
நான் எதிர்க்கட்சிகளிடம் புகார்களை கேட்டுப்பெறுவதில்லை. அவர்கள்தான் புகார்களை கொடுக்கின்றனர். புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மத்திய அரசு மாநில தேர்தல் ஆணையரை உரிய விதிப்படி நியமிக்க தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது. அவரை வெளிப்படையான தேர்வு முறை மூலம் தேர்வு செய்யவும் அறிவுறுத்தி உள்ளது. எனது கடிதத்தை குப்பையில் போட முதல்-அமைச்சர் கூறியுள்ளார். முதல்-அமைச்சருக்கு வார்த்தைகளை தேர்ந்தெடுத்து உபயோகிப்பதில் பிரச்சினை இருப்பதாக தெரிகிறது.
இவ்வாறு கவர்னர் கிரண்பெடி அந்த பதிவில் கூறியுள்ளார்.