ரெயில் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் - டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கம் வலியுறுத்தல்
மத்திய அரசு ரெயில் டிக்கெட் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மதுரை,
மத்திய அரசு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் திடீரென்று அதிரடியாக ரெயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியது. இதற்கு பொதுமக்கள் மட்டுமின்றி ரெயில்வே ஊழியர்கள் தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது குறித்து மதுரை கோட்ட ரெயில்வே டி.ஆர்.இ.யூ. செயலாளர் சங்கரநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு பதவியேற்றதில் இருந்து நல்ல லாபத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி வருகிறது. குறிப்பாக மக்களுக்கு கட்டாய சேவை செய்யும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்து வருகிறது. இதற்காக, விவேக் தோப்ராய் என்பவரது தலைமையில் ஒரு குழு அமைத்தது.
அந்த குழுவின் பரிந்துரைப்படி ரெயில்வே ஊழியர்களுக்கு எதிராகவும், பொதுமக்களுக்கு விரோதமாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த குழு, ரெயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைக்கும் படி கடந்த 2017-ம் ஆண்டில் பரிந்துரை செய்தது.
மேலும், பொது பட்ஜெட்டுடன் இணைக்கும் போது, ஓய்வூதியத்துக்கான ரூ.45 ஆயிரம் கோடியை மத்திய அரசு ரெயில்வேக்கு ஒதுக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்தது.
ஆனால், பொது பட்ஜெட்டுடன் இணைத்த மத்திய அரசு, ரெயில்வே ஓய்வூதியர்களுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்கீடு செய்யாமல், பயணிகளிடம் பறிமுதல் செய்ய நினைக்கிறது.
இதற்காக, பாசஞ்சர் மற்றும் எக்்ஸ்பிரஸ் ரெயில்களின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வால் ரெயில்களை தனியார் இயக்க முன்வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
மக்கள் சேவையில் ரெயில் போக்குவரத்து இருப்பதால் தான், உலகிலுள்ள அனைத்து ரெயில் நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. அமெரிக்காவில் ரெயில்கள் தனியாரால் இயக்கப்பட்டாலும் மக்களுக்கான சேவை என்ற அடிப்படையில் அரசு மானியம் வழங்கி வருகிறது.
நமது நாட்டில் ரெயில்வேக்கு வழங்கப்படும் டீசலுக்கு 11 சதவீதம் செஸ் வரி விதிக்கப்படுகிறது. இது சாதாரணமாக விதிக்கப்படும் வரியை விட அதிகமாகும். எனவே, மத்திய அரசு கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.