பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அலங்காநல்லூர் பகுதியில் வெல்லம் தயாரிப்பு பணி தீவிரம்
மதுரை அலங்காநல்லூர் பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மதுரை,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வட்டாரத்தில் கல்லணை, கோட்டைமேடு, குமாரம் மற்றும் கொண்டையம்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில் ஆலை கரும்புகள் சாகுபடி செய்வது வழக்கம். அதன்படி இந்த வருடமும் ஆலை கரும்புகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. கரும்புகளில் ஆலை கரும்பு, சீனி கரும்பு என இரு வகைகள் உள்ளன. ஆலை கரும்புகளை செங்கரும்பு என்றும் அழைப்பார்கள். ஆலை கரும்புகளை அரைத்து அதனை பக்குவப்படுத்தினால் வெல்லம் தயாரிக்கலாம். சீனி கரும்புகள் பொங்கல் பண்டிகையின் போது சாப்பிடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. வருடம் ஒரு முறை மகசூல் செய்யப்படும் இந்த கரும்பின் வயது 10 மாதங்களாகும். டிசம்பர், ஜனவரி மாதங்களில் அதிக அளவில் கரும்புகள் அறுவடை செய்யப்படுகிறது. அறுவடை செய்யப்பட்ட பின் அந்த கரும்புகள் ஆலைகளுக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு வெல்லமாக மாற்றப்படுகிறது.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே இருப்பதால், அலங்காநல்லூர் பகுதிகளில் உள்ள ஆலைகளில் மண்ட வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், விவசாயியுமான ராஜா கூறியதாவது;- ஒரு டன் கரும்புக்கு 80 கிலோ முதல் 90 கிலோ வரை வெல்லம் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு 40 முதல் 45 டன் வரை மகசூல் கிடைக்கும். கரும்பு விவசாயத்திற்கு காலப்போக்கில் ஆட்கள் கிடைக்காமல் போய்விட்டது. வேலைக்கு ஆட்கள் கிடைக்காததால் கரும்பு அறுவடை செய்வதற்கும் அதனை ஆலைக்கு எடுத்து செல்வதற்கும் முடியாத நிலை உருவாகி உள்ளது.
அலங்காநல்லூர் பகுதியில் கிடைக்கும் கரும்பு அதிக ருசியும், மணமும் கொண்டவை.
அதன் காரணமாக அலங்காநல்லூர் வெல்லத்திற்கு மார்க்கெட்டுகளில் தனி இடம் உண்டு. ஒரு கிலோ மண்ட வெல்லம் மொத்த விலைக்கு ரூ.50 எனவும், சில்லரையாக ரூ.60 எனவும் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் வெல்லம் தினமும் லாரியில் ஏற்றப்பட்டு மதுரை மார்க்கெட்டுக்கு அனுப்பப்படுகிறது. மதுரையில் இருந்து நகரில் உள்ள கடைகளுக்கும் தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களுக்கும் செல்கிறது.
இதுபோல், கேரளாவிற்கும் அதிக அளவில் வெல்லம் கொண்டு செல்லப்படுகிறது. கரும்பு சாகுபடியை பொறுத்தமட்டில் அதிக அளவில் லாபம் கிடைத்தாலும், தற்போது வேலைக்கு ஆட்கள் கிடைக்காத காரணத்தால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கூறினார்.
சர்க்கரை ஆலையில் பணிபுரியும் தொழிலாளிகள் கூறியதாவது:-
பொங்கல் பண்டிகை என்றாலே கரும்பும், சர்க்கரை பொங்கலும் தான் ஞாபகம் வரும். பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெல்லம் தயாரிக்க கரும்புச் சாற்றை 2 முதல் 3 மணி நேரம் வரை தொடர்ச்சியாகக் கொப்பரையில் காய்ச்ச வேண்டும். அந்த சாறு குறிப்பிட்ட கொதி நிலையை அடைந்தபிறகு மர அச்சுகளில் ஊற்றி குளிர்விக்கப்படுகிறது. அதன்பின்னர், அந்த கட்டிகளைத் தனித்தனியாகப் பிரித்தெடுத்து கைகளின் மூலம் உருட்டி வெல்லமாக மாற்றப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த வெல்லம் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி விற்பனை செய்யப்படுகிறது. தேவையான அளவில் வெல்லக்கட்டிகளை உருவாக்கி கொள்ளலாம். பண்டிகை காலங்களில் வெல்லத்தின் விலை கொஞ்சம் அதிகமாக இருக்கும். மற்ற நேரங்களில் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படும். அதுபோல், கரும்பில் இருந்து வரும் எந்த பொருளும் வீணாகாது. கரும்பு சக்கையை காய வைத்து கரும்பு சாறு காய்ச்சும்போது எரிபொருளாக பயன்படுத்தி கொள்ளலாம். அதுபோல், காய்ச்சும் போது வருகிற கழிவை உரமாகவும் மாற்றி கொள்ளலாம். இவ்வாறு கூறினர்.