பல நிறங்களில் அடையாள அட்டை வழங்கக்கோரி கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை
வேட்பாளர்களின் முகவர்களுக்கு பல நிறங்களில் அடையாள அட்டை வழங்கக்கோரி கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 27, 30-ந்தேதிகளில் நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள கே.எல்.கே. அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெறுகிறது.
தேர்தலின் போது வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையை காண்பித்தால், அவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்ல அனுமதிக்கபடுவார்கள் என்றும், வேட்பாளர்களின் முகவர்கள், தங்களது முகவர் நியமன படிவம் 21-ஐ காண்பித்தால் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் தேவையில்லாத கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக வேட்பாளர்களின் பதவிக்கு ஏற்றபடி அவர்களின் முகவர்களுக்கும் குறிப்பிட்ட பல நிறத்தில் அடையாள அட்டை வழங்கிட நேற்று முடிவு செய்யப்பட்டது. இது குறித்து கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் வாயிலாக தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கும், அவர்களது முகவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நேற்று மாலையில் ஒரே சமயத்தில் 700-க்கும் மேற்பட்ட முகவர்கள் தங்களுக்கு உரிய புதிய அடையாள அட்டையை பெறுவதற்காக கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்து குவிந்தனர். அப்போது அங்கு உரிய போலீஸ் பாதுகாப்பு இல்லாத சூழலிலும், ஒரே சமயத்தில் அனைவரது கேள்விகளுக்கும் அதிகாரிகளால் பதிலளிக்க முடியாத சூழலிலும் அடையாள அட்டை பற்றாக்குறையாலும் கூச்சல், குழப்பம் நிலவியது.
எதையும் முறையாக முன்கூட்டியே தெரிவிக்காமல் கடைசி நேரத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்வதற்கான அனுமதி அட்டை வழங்குவதில் அதிகாரிகள் குளறுபடி செய்ததாக புகார் எழுந்தது.
இந்த நிலையில், நேற்று மாலை அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் அவர்களது முகவர்கள் என சிலர் ஒன்று கூடி கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் மற்றும் கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து அனைவரும் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் நேற்று இரவு 9 மணி வரை மேற்கண்ட அடையாள அட்டை வழங்கும் பணி கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தொடர்ந்து நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் அனைத்தும் கன்னிகைபேர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் என பல்வேறு பதவிகளுக்கு போட்டியிட்ட வேட்பாளர்களில் முகவர்களுக்கு ஒரே மாதிரியான நிறத்தில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் பல்வேறு பதவிகளுக்கு பல நிறங்களில் வாக்குச்சீட்டு வழங்கப்பட்டதை போல வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு செல்லும் முகவர்களுக்கும் பல நிறங்களில் அடையாள அட்டை வழங்க வேண்டும் அல்லது வேட்பாளர்களின் படிவம் 21 நகலை இணைத்து தரவேண்டும் என்று தி.மு.க.வினர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், முகவர்களுக்கு ஒரே மாதிரியான நிறத்தில் அடையாள அட்டை வழங்குமாறு கலெக்டர் கூறியிருந்தார். அதனையே நாங்கள் அமல்படுத்தியுள்ளோம் என்று எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கூறினார்.
ஆனால் மற்ற வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் முகவர்களுக்கு பல நிறங்களில் அடையாள அட்டை வழங்கியுள்ளதாக திருவள்ளூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கும்மிடிப்பூண்டி வேணு கூறினார். எனவே, தங்களது கோரிக்கையை நிறைவேற்றுமாறு அவரும் எல்லாபுரம் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் மூர்த்தி, சத்தியவேலு உள்ளிட்டோர் கோரிக்கை மனுவை வழங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.