தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்ட விபத்துகளில் 14 பேர் பலி - சென்னையில் 5 பேர் சாவு

தமிழ்நாடு முழுவதும், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடந்த சாலை விபத்துகளில் 14 பேர் பலி ஆனார்கள். சென்னையில் மட்டும் 5 பேர் உயிர் இழந்தனர். இதுபற்றிய விவரம் வருமாறு:-

Update: 2020-01-01 23:00 GMT
சென்னை, 

காஞ்சீபுரம் நடுதெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் ஷா (வயது 24). இவர் இருங்காட்டுகோட்டையில் உள்ள கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் ஷா(26). இவர், காஞ்சீபுரத்தில் உள்ள பட்டுச்சேலை கடையில் வேலை செய்து வந்தார்.

இவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் இரவு தங்கள் நண்பர்களுடன் காஞ்சீபுரத்தில் புத்தாண்டு கொண்டாடிவிட்டு அதிகாலையில் காரில் சென்னைக்கு புறப்பட்டு வந்தனர். பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுகோட்டையில் வந்தபோது, இவர்கள் சென்ற கார் மீது லாரி மோதியது.

இதில் விக்னேஷ் ஷா, சங்கர் ஷா இருவரும் உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த அவர்களுடைய நண்பர்களான மணிஷா, சுந்தர் ஷா, சுரேஷ் ஷா, அரவிந்த் ஆகியோர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னையை அடுத்த புதுபெருங்களத்தூரைச் சேர்ந்தவர் தங்கவேல்(19). இவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். தனது நண்பர்கள் 2 பேருடன் புத்தாண்டை கொண்டாட இருசக்கர வாகனத்தில் தாம்பரத்தில் இருந்து குரோம்பேட்டை நோக்கிச் சென்றார்.

தாம்பரம் பஸ் நிலையம் அருகே சென்ற போது சாலையோரம் நின்ற மாநகர பஸ் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த தங்கவேல், பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர்கள் இருவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதுபற்றி குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

எண்ணூர் தாழங்குப்பம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த ஆகாஷ் (19) என்பவர், புத்தாண்டை கொண்டாடிவிட்டு நேற்று அதிகாலை 2 மணி அளவில் மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினார். எண்ணூர் தாழங்குப்பம் கடற்கரை சாலை வழியாக வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதினார்.

இதில் எதிரே வந்த மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த எண்ணூர் குப்பம் 5-வது தெருவைச் சேர்ந்த மீனவர் சுந்தர்(48) பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த ஆகாஷ், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி மாதவரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செங்குன்றம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான சங்கர்(31) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் சுகுமார் (31) என்பவருடன் சென்னையில் புத்தாண்டு விழாவை கொண்டாடிவிட்டு மோட்டார் சைக்கிளில் செங்குன்றத்துக்கு திரும்பினார்.

புழல் கதிர்வேடு சிக்னல் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சங்கர், அதே இடத்தில் பலியானார். சுகுமார், காயங்களுடன் உயிர் தப்பினார். இதுபற்றி மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட விபத்துகளில் அண்ணன்-தம்பி உள்பட 6 பேர் பலி ஆனார்கள்.

நாகர்கோவில் வடசேரி பகுதியில் புத்தாண்டு கொண்டாடுவதற்காக 4 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். திடீரென்று அந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடியது. அப்போது எதிரே ஒரு லாரி வந்தது. இதனால் மோட்டார் சைக்கிளை பார்த்ததும் லாரியை டிரைவர் நிறுத்திவிட்டார். அந்த லாரியின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில், இதில் இருந்த அஜெய் (18) என்பவர் சம்பவ இடத்திலேயே பலி ஆனார். மற்ற 3 பேரையும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சுனில் (17) என்பவர் உயிர் இழந்தார்.

இந்த விபத்தில் பலியான அஜெய்யும் சுனிலும் அண்ணன்-தம்பி ஆவார்கள்.

இதேபோல் படபச்சை பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சுரேஷ் (45), விஜயன் (44), பால்ராஜ் (42) ஆகிய 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். திடீரென்று நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் எதிரே வந்த டிப்பர் லாரி மீது மோதியதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலி ஆனார்கள்.

தேங்காப்பட்டணம் அம்சி என்ற இடத்தில் 3 பேர் சென்ற ஒரு மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள தடுப்பு கம்பியில் மோதியதில் சுபின் (26) என்பவர் உயிர் இழந்தார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் தனது அண்ணன் திருமணத்துக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

கோவையில் நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சுங்கம்-உக்கடம் பைபாஸ் ரோட்டில் சென்றனர். அப்போது மேம்பால தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அவர்களில் ஒருவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்தில் பலியான வாலிபர் கோவை உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த அன்சார் தீன் (20) என்றும், காயம் அடைந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த அஜ்மல் ரகுமான்(19) என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதேபோல், கோவையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்த சந்துரு (25) என்ற என்ஜினீயர் புத்தாண்டையொட்டி தனது நண்பர்கள் இருவருடன் ஓட்டலுக்கு விருந்து சாப்பிட சென்றார். அங்கிருந்து சந்துரு ஒரு மோட்டார் சைக்கிளிலும், அவரது நண்பர்கள் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் தாங்கள் தங்கி இருந்த அறைக்கு திரும்பினார்கள். வழியில் சந்துரு ஓட்டிய மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் விழுந்ததில், அவர் படுகாயம் அடைந்தனர். தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம், காவனூர் அடுத்த மங்கான்குடிசை கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக்(27) சென்னையில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்றுமுன்தினம் இரவு நள்ளிரவில் காவனூரில் நண்பர்களுடன் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார்.

அப்போது மங்கான்குடிசை அருகே தெருவில் சாலையில் சென்ற ரூபாவதி என்ற மூதாட்டி மீது மோதாமல் இருப்பதற்காக மோட்டார் சைக்கிளை திருப்பினார். அப்போது நிலைதடுமாறி சாலை அருகே இருந்த சுவரில் மோதிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த கார்த்திக்கை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் கார்த்திக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்