சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சாலை விபத்தில் சிக்கி 318 பேர் காயம் - 2 இன்ஸ்பெக்டர்களும் காயம் அடைந்தனர்

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பல்வேறு பகுதிகளில் நடந்த சாலை விபத்தில் சிக்கி 318 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்களும் சிக்கினர்.

Update: 2020-01-01 22:45 GMT
சென்னை,

உலகம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. சென்னையில் 2020-ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் விதமாக மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த கொண்டாட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து வந்த லட்சக்கணக்கான மக்கள் புத்தாண்டை வரவேற்று கொண்டாடினர். கொண்டாட்டத்தின் மிகுதியாக அதிவேகமாக வாகனம் ஓட்டியும், மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டனர். சிலர் விபத்தில் சிக்கினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் 60 இடங்களில் 108 ஆம்புலன்ஸ்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

அந்த வகையில் புத்தாண்டு விபத்தில் சிக்கி சென்னை அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 318 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 48 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 150 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 57 பேரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 63 பேரும் சிகிச்சை பெற்றுள்ளனர்.

லேசான காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். பலத்த காயம் அடைந்தவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆங்காங்கே போலீசார் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர். சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அருகே நேற்று தரமணி இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதியது. இதில் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, வீடு திரும்பினார்.

இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மீது மோதிய மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றார். இது தொடர்பாக விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த பிரசாத் என்பவரை அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதைப்போல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நேற்று பாதுகாப்பு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய எழும்பூர் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா(வயது 45) மீது பின்னால் வந்த ஆட்டோ மோதியது. இதில் காயம் அடைந்த அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

ஆட்டோவை ஓட்டி வந்த கொடுங்கையூரை சேர்ந்த மணிகண்டனை(34) அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விபத்தில் சிக்கி 304 பேர் படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்